;
Athirady Tamil News

பறக்கும் தட்டுகள்: வேற்றுகிரகவாசிகளை தேடும் ஆய்வில் இதுவரை கிடைத்துள்ள முக்கிய தகவல்கள்!!

0

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் வானில் பறந்தபோது கேமராவில் பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள் இந்த ஆண்டு ஜுலை மாதம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவிடம் காட்டப்பட்டன.

இந்த கருப்பு வெள்ளைக் காட்சிகளில் இடம்பெற்றிருந்த படங்கள் கொஞ்சம் தெளிவற்ற படங்களாக இருந்தன. இந்தக் காட்சிகளில் ஒன்று, வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பளபளப்பான ஒரு பறக்கும் தட்டைக் காட்டியது.

இப்படி வானில் பறந்துகொண்டிருந்த அந்த உபகரணத்தைப் பார்த்த அமெரிக்க கடற்படையினர் மிகவும் ஆச்சரியப்பட்டுப் பேசிய காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

வெவ்வேறு நேரங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு காட்சிகளில் புதிரான அந்த உபகரணம் ஒரே மாதிரி பறந்துகொண்டிருந்தது பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகள் எப்போதோ வெளியானவையாக இருந்தாலும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அவற்றை கடந்த 2020ஆம் ஆண்டுதான் வெளியிட்டது.

இக்காட்சிகளை யூடியுபில் பல லட்சம் பேர் பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒன்று இக்காட்சிகளைப் பார்த்துவிட்டு, அதுகுறித்த உண்மைகள் கண்டறியப்படும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான விவாதங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்தது.

கிரெக் அகிஜியன் என்பவர் அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் வாழ்வியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இதுபோல் புதிரான உபகரணங்கள் அல்லது பறக்கும் தட்டு போன்றவை வானில் பறந்துகொண்டிருப்பது தொடர்பான காட்சிகள் பல நூற்றாண்டுகளாகவே தென்பட்டு வருவதாகவும், இவற்றை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் என அட்டவணைப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், “இந்த அடையாளம் தெரியாத பறக்கும் உபகரணங்கள் குறித்து முதன்முதலில் 1947ஆம் ஆண்டு விவாதிக்கப்பட்டது. அப்போது ஒரு தனியார் விமானத்தின் பைலட்டான கென்னெத் அர்னால்டு என்பவர் அமெரிக்க கடற்கரையோரம் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த போது வானில் அதிசய பறக்கும் தட்டு ஒன்று அதிவேகமாகப் பறந்து சென்றதைப் பார்த்தார். அதுவொரு விசித்திரமான பொருளாக அவருக்குத் தோன்றியது,” என்று கிரெக் அகிஜியன் கூறினார்.

“இந்தச் செய்தி காட்டுத்தீ போல அமெரிக்கா முழுவதும் பரவியது. ஒரு பத்திரிக்கையாளர் அந்தப் பொருளுக்கு ‘பறக்கும் தட்டு’ எனப் பெயரிட்டார். அதன் பிறகு தான் பறக்கும் தட்டு என்ற பெயர் ஏற்பட்டது. அதற்குப் பின்னர் அந்தப் பொருட்களை அடையாளம் தெரியாத பறக்கும் உபகரணங்கள் என யாரும் எப்போதும் அழைக்கவில்லை.

அது மட்டுமின்றி, இதுபோன்ற பறக்கும் தட்டுகள் வேற்று கோள்களிலிருந்து வந்திருக்கலாம் என்ற ஒரு புதிய சிந்தனைக் களமும் பின்னர் தான் உருவானது. அதனால், இந்த பறக்கும் தட்டுகள் குறித்து வரலாற்று ரீதியிலான பார்வை வேண்டும்.”

அதன் பின்னர், பறக்கும் தட்டுகளைப் பார்த்த அனுபவங்கள் குறித்து அடிக்கடி பொதுமக்களில் யாராவது ஒருவர் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தனர்.

கிரெக் அகிஜியனைப் பொறுத்தளவில், 1950களில் இந்த பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாக ஏராளமானோர் கதைகளைச் சொன்னார்கள் என்பது மட்டுமின்றி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தக் கதைகள் அதிகரித்தன.

பிரான்சில் 1954ஆம் ஆண்டு இப்படியொரு பறக்கும் தட்டைப் பார்த்ததாக சிலர் கூறியபோது, அவர்கள் பறக்கும் தட்டை மட்டும் பார்க்கவில்லை என்றும், அதற்குள் ஆட்கள் அமர்ந்திருந்ததைப் பார்த்ததாகவும் கூறினர்.

இதன் தொடர்ச்சியாக 1970களில் தொடங்கி 90கள் வரை இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வெளியாகின.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் சுமார் 45 ஆண்டுகள் நடந்ததுகூட இது மாதிரியான பறக்கும் அதிசயப் பொருட்கள் வானில் தோன்றியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கிரெக் அகிஜியன் கூறுகிறார்.

அந்தக் காலகட்டத்தில் இரண்டு தரப்பில் இருந்தும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்க பல்வேறு புதிய யுத்திகள் கடைபிடிக்கப்பட்டன. அந்த நேரத்தில்தான் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல்கள் நடந்த நிலையில், அது தொடர்பான ஆர்வம் அல்லது பயம் காரணமாக வேற்றுகிரகவாசிகள் பூமியைச் சுற்றிப் பறந்து பல தகவல்களைத் திரட்ட முயன்றதாக பொதுமக்கள் நம்பினர்.

மேலும், ‘அப்போதுதான் நிலவைச் சென்றடைவதற்கான போட்டி, உலகின் சில நாடுகளில் தொடங்கியிருந்தது. இதுபோன்ற பறக்கும் தட்டுகள் அதற்கான இரண்டாவது காரணமாக இருந்திருக்கலாம்,’ என கிரெக் அகிஜியன் நம்புகிறார்.

“இந்த பறக்கும் தட்டுகள் கதைக்கு வலு சேர்ப்பதுபோல், அப்போது வெளியான ஏராளமான நாவல்கள் மற்றும் திரைப்படங்கள் இது தொடர்பான காட்சிகளை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தன.

தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மனிதனை நிலா மற்றும் செவ்வாய் கோள்களில் குடியேற்றுவது குறித்த விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தன. உண்மையில் அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என பொதுமக்கள் அப்போது முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் இதுதொடர்பான மேலும் பல புதிய கண்டுபிடிப்புகள் மனிதனை வேறு கோளில் குடியேற்றுவதை சாத்தியமாக்கும் என்றும் பொதுமக்கள் நம்பினர்,” என்கிறார் கிரெக் அகிஜியன்.

குறிப்பாக 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுகுறித்து மீடியாக்கள் அதிக அளவில் விரிவாக விவாதிக்கத் தொடங்கின.

அமெரிக்க கடற்படை விமானங்கள் வானில் பறந்துபோது காணப்பட்ட காட்சிகள் என விமானிகள் பதிவு செய்த படங்களில் அதிசயிக்கத்தக்க, அடையாளம் தெரியாத பொருட்கள் காணப்படுகின்றன.

புலனாய்வு பத்திரிக்கையாளரான லெஸ்லி கீனே, இதுபோன்ற பறக்கும் தட்டுகள் குறித்து கடந்த 23 ஆண்டுகளாக செய்திகளை அளித்துக்கொண்டிருக்கிறார். வானில் பறக்கும் இந்த அதிசயப் பொருட்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் ரகசியமாகச் சேகரித்து வருவதாகவும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் என்பதற்குப் பதிலாக அவற்றை அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் என்ற பெயரில் அழைப்பதாகவும் அவர் கூறுகிறார்.

“இதுபோன்ற பல சம்பவங்கள் சில நேரங்களில் நகைச்சுவையாகவும் மாறியிருக்கின்றன. ஏற்கெனவே இதுபோன்ற அதிசயப் பொருட்களை வானில் பார்த்ததாக ஏராளமான செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஆழ்கடலிலும் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வெளியாகும் தகவல்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் சேகரித்து வருகின்றனர்,” என்றார் அவர்.

இதற்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை நியமித்திருந்த சிறப்புப் பிரிவுக்குப் போதுமான நிதி ஒதுக்காததால் அந்தப் பிரிவின் தலைவர் 2017ஆம் ஆண்டு அவருடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு பல்வேறு உண்மைகளை பொதுவெளியில் போட்டு உடைத்தார்.

அதன் பின்னரே அதிசயப் பொருட்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க ஒரு ரகசிய நடவடிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வந்த தகவல் அனைவருக்கும் தெரிய வந்தது.

அந்த சிறப்புப் பிரிவின் தலைவர் பதவி விலகியபோது, தன்னையும், வேறு பல பத்திரிக்கையாளர்களையும் அழைத்து, ஏராளமான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துகொண்டதாக லெஸ்லி கீனே கூறுகிறார்.

இதன் அடிப்படையில் லெஸ்லி கீனே, தனது குழுவினருடன் இணைந்து நியூயார்க் டைம்ஸ் இதழில் ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டார். அதன் பின்னர் இந்த அதிசயப் பொருட்கள் குறித்த விவாதங்கள் மேலும் அதிகரித்தன.

இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க அமெரிக்க அரசு ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவிற்காக நிதியையும் ஒதுக்கியது.

இந்த ஆண்டு ஜுன் மாதம் லெஸ்லி கீனே மற்றொரு செய்திக் கட்டுரையை வெளியிட்டார். அதில் இதுகுறித்து ஏராளமான தகவல்களை முதன்முதலில் வெளியிட்ட டேவிட் க்ரஷ் என்ற அமெரிக்க உளவு நிறுவன முன்னாள் அதிகாரியை நேர்காணல் செய்திருந்தார். அவர் அளித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இந்த டேவிட் க்ரஷ், ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருந்தபோது அங்கும் பணியாற்றியிருக்கிறார்.

அவரது கூற்றின்படி, பூமியில் மோதி உடைந்துபோன பறக்கும் தட்டுகள் மற்றும் அவற்றிலிருந்து மீட்கப்பட்ட பொருட்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

400 கோடிக்கும் மேற்பட்ட வான்பொருட்களில், உயிர்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலை எங்கே தொடங்குவது என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

“இதுவொரு முக்கியமான தகவல். இதுதொடர்பாக, இந்த ரகசிய பணியில் ஈடுபட்டிருந்த பல மூத்த அதிகாரிகள் மற்றும் பலரிடம் அவர் பேசியிருக்கிறார். அப்போது கிடைத்த தகவல்களை அவர் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், உடைந்து போன பறக்கும் தட்டுகளையோ, அவற்றில் இருந்த பொருட்களையோ டேவிட் க்ரஷ் ஒருபோதும் பார்க்கவில்லை என்றும் ஆய்வு செய்யவில்லை என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், அது போன்ற பொருட்கள் எப்போது பூமியில் விழுந்தன என்பது குறித்தும், அவற்றை யார் கைப்பற்றியனர் என்பது குறித்தும் விரிவான தகவல்களை கிரஷ் அளிக்கிறார்.

இந்தத் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பானவை. அவற்றை பொதுவெளியில் யாரும் வெளியிடக்கூடாது. அமெரிக்க நாடாளுமன்றம் மட்டும் இந்தத் தகவல்கள் குறித்து விசாரணை செய்யும்,” என்கிறார் லெஸ்லி கீனே.

இந்தத் தகவல்கள் குறித்த கேள்விக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறையினர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

ஆனால், இப்போது அல்லது முன்னெப்போதும் ரிவர்ஸ் எஞ்சினியரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறக்கும் தட்டுகளை ஆய்வு செய்யவில்லை என பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

டேவிட் கிரஷ் அளித்துள்ள தகவல்கள் அனைத்தும் நாடாளுமன்றத்திடம் அளிக்கப்பட்ட தகவல்கள் என்ற நிலையில், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இதுபோன்ற ஆய்வுகள் நடந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நாடாளுமன்ற குழுவின் நோக்கமே, அமெரிக்க அரசு அதிகாரிகள் இதுபோன்ற ஏதாவது தகவல்களை ரகசியமாக வைத்துப் பாதுகாக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிப்பதுதான்.

“இந்த பறக்கும் தட்டுகள், விமானப் பயணப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முன் உள்ள சவால்கள் என்றும், அவை குறித்து விரிவான விசாரணை தேவை என்றும் நான் கடந்த 17 ஆண்டுகளாகப் பேசி வருகிறேன்.

அது ஒரு தனி உலகம். அதனால்தான் அமெரிக்க நாடாளுமன்றம் இதுகுறித்து பெரிய அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. இதேபோல் பூமியைத் தவிர வேறு கோள்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறியும் உரிமை பொதுமக்கள் அனைவருக்கும் உள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன,” என லெஸ்லி கீனே கூறினார்.

புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் துணையுடன் விண்வெளியைப் பற்றிய புரிதலைக் கொண்டு வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதம் பிரான்க் என்பவர் ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கற்பனைக் கதைகள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் அறிவியல் உலகம் செயல்படவில்லை என்பதால், “இந்தப் பொருட்கள் குறித்த ஆய்வுகள் இதுவரை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஏனென்றால், இந்த அதிசயப் பொருட்கள் குறித்த போதிய வலுவான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்ளை,” அவர் கூறுகிறார்.

“இதுவரைக்கும் இந்த பறக்கும் தட்டுகள் குறித்து அறிவியல் பூர்வமாக எதையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் புனைகதைகளாகவும், மக்கள் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல்களுமாக மட்டுமே உள்ளன.

மேலும், உடலியல் நிபுணர்களும், புலனாய்வு அதிகாரிகளும் மனிதர்களுடைய நினைவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, அவற்றை முழுமையாகச் சார்ந்திருக்க முடியாது என்றும், அதற்கான அறிவியல் பின்னணி எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்,” என்கிறார் ஆதம் பிரான்க்.

இப்போது காலம் மாறிக்கொண்டிருக்கிறது. பூமிக்கு வெளியில் உயிர்கள் இருக்கின்றனவா என புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் தேட அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா சில திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆதம் பிரான்க் கூட ஒரு மிகப்பெரிய புலனாய்வு நிபுணராகவே இருக்கிறார்.

இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், பூமிக்கு வெளியே எங்கு சென்று உயிர்களைத் தேடுவது என்பதுதான் என்கிறார் அவர்.

“உதாரணமாக நெப்ராஸ்காவில் ஒரு மனிதர் இருக்கிறாரா எனத் தேட வேண்டுமானால், அவரை இமயமலையில் நாம் தேட முடியாது. வேற்றுகிரகவாசிகள் தொடர்பான தேடலும் அது போலத்தான் இருக்கிறது.

சூரிய குடும்பத்தில் 400 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அதற்கும் மேல் பல கோள்கள் உள்ளன. இதில் பூமி எனப்படுவது, இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைப் போன்றது. வேற்றுகிரகவாசிகள் எங்கு வசிக்கின்றனர் என்பதே தெரியாத நிலையில், அவர்களை எங்கு சென்று தேடுவது?” எனக் கேட்கிறார் பிரான்க்.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் சாட்சியம் அளித்த கடற்படை விமானிகளுடைய கூற்றின் அடிப்படையில் பார்த்தால், இது வெளிப்படையான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம் என பிரான்க் கூறுகிறார். ஆனால், வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் சந்தேகத்தை எழுப்பக்கூடிய அளவிலேயே உள்ளன.

“இந்தத் தகவல்கள் எல்லாம் ஏதோவொரு ரகசிய விசாரணை அமைப்பு அளிக்கும் தகவல்களைப் போலத்தான் உள்ளளன. பறக்கும் தட்டுக்கள் குறித்தோ, வேற்றுகிரகவாசிகள் குறித்தோ யாரிடமும் தெளிவான படங்கள் அல்லது ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

பூமிக்கு வெளியிலுள்ள பிற கோள்களுக்குச் செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் நம்மைவிட அதிக தொழில்நுட்ப வசதிகளை வைத்திருந்தால் மட்டுமே, இப்படி பூமிக்கு அருகே அவர்கள் அடிக்கடி வந்து செல்ல முடியும். இதெல்லாம் நம்பும்படியான கதைகளாக இல்லை,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய ஆதம் பிரான்க், பறக்கும் தட்டுகள் குறித்து நாசா விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த வீடியோ காட்சிகளில் இருந்த ஒரு தட்டு மணிக்கு வெறும் 40 மைல் வேகத்தில்தான் பறந்து சென்றது என்றும், அது பூமியிலுள்ள பொருட்களைவிட அதிவேகமானது எனக் கருத முடியாது என்பதால் அறிவியல் யுகம் இதுபோன்ற செய்திகளை வெறும் கட்டுக்கதைகளாகவே பார்க்கும் என்றார்.

மேலும் பேசிய அவர், “ஜேம்ஸ் வெப் போன்ற அதிநவீன தொலைநோக்கிகள் நம்மிடையே உள்ளன. பூமிக்கு வெளியில் பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைக்கூட அவை கண்டுபிடித்துவிடும்.

ஏதாவது ஒரு கோளில் ஆக்ஸிஜன் இருந்தால்கூட அதை அந்த தொலைநோக்கிகளால் கண்டுபிடிக்க முடியும். அந்த கோளின் உயிர்த்தன்மையை நாம் பெறமுடியும். அதைக் கொண்டு அந்தக் கோளின் உயிரியலை நாம் புரிந்துகொள்ள முடியும்,” என்றார்.

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த உண்மைகளை, ஏராளமான தொழில்நுட்பங்கள் இங்கே இருக்கும் நிலையில், இந்தத் தலைமுறையினரால் தான் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும் என ஆதம் பிரான்க் நம்புகிறார்.

ஆனால், பூமிக்கு வெளியிலும் உயிர்கள் இருக்கின்றன எனத் தெரிந்தால் உண்மையில் என்ன நடக்கும்?

உண்மையில் பூமிக்கு வெளியில் உயிர்கள் இருக்கின்றனவா என்பது விரைவில் தெரியவரும் என்றே நம்பப்படுகிறது.

பூமிக்கு வெளியில் உயிர்கள் வாழ்கின்றனவா எனக் கண்டறிய ஐக்கிய ராஜ்ஜியம் மேற்கொண்டுள்ள திட்டமான எஸ்ஈடிஐ (SETI)யின் உறுப்பினரான செல்சியா ஹெரெமியா என்பவர் இருக்கிறார்.

வேற்றுகிரகவாசிகள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தொழில்நுட்பத்துடன் இணைந்து நாம் எப்படிச் செயல்படுவது என்பது குறித்த ஆய்வுப் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

பிபிசியிடம் பேசிய செல்சியா ஹெரெமியா,” வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடித்தால், அவர்களுடன் இணைந்து என்ன செய்வது என்பது குறித்த தெளிவான திட்டங்கள் எவையும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர்களை நாம் எப்போது சந்திக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்தே அது அமையும்.

உதாரணமாக நீதித்துறை மற்றும் சுரண்டல் குறித்து அவர்களிடம் பேசும் நிலை உருவாகலாம். நமக்கு நன்றாகத் தெரியும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுமக்களைச் சுரண்டும் போக்கு நீடித்து வருகிறது. இன்றளவும் நாம் வேற்றுகிரகவாசிகளை ஏலியன்கள் என்றே அழைக்கிறோம். அவர்களை மனிதத்தன்மையுடன் நாம் நடத்தவேண்டும்,” என்றார்.

பொதுவாக ஒரு சில அரசுகள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன. அந்த அரசுகள் மனிதத்தன்மையற்ற முறையில் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஏலியன்களை கண்டுபிடித்தால் அவர்களுடன் யார் என்ன பேசுவது என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய செல்சியா ஹெரெமியா, “ஒரு சில அரசுகள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு முடிவுகளை எடுக்கும்போது, மற்ற அரசுகள் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. ஒரு சிலருக்கு இது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வழியாக இருக்கும், வேறு சிலருக்கு வேறு நோக்கங்கள் இருக்கலாம்.

ஏலியன்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதை சில அரசுகள் தன்னிச்சையாகவும், தனியாகக் கோலோச்சும் விதத்திலும் பயன்படுத்திக்கொள்ள முயலும். எனவே அறிவியலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த பிரச்னைதான் இது,” என்றார்.

வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது அனைத்து அரசுகளும் இணைந்து செயல்படுவதில்தான் இருக்கிறது. ஆனால், இதில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படாவிட்டால், அது வேற்றுகிரகவாசிளைத் தொடர்பு கொள்வதில் பெரும் தடையாக இருக்கும்.

“அது போன்ற ஒரு நிலை ஏற்படும்போது, அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஒற்றுமையாகப் பயன்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த சிக்கலான விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்குப் புரிய வைப்பது மற்றுமொரு புதிய சிக்கலாக மாறும். மனித வரலாற்றில் அதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் நெறிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும்,” என்றார் செல்சியா ஹெரெமியா.

பூமிக்கு வெளியில் உயிர்கள் வாழ்கின்றன என முன்னாள் மற்றும் இந்நாள் உளவு அமைப்பினர், உள்ளிட்ட பலர் உறுதியாக நம்பினாலும், அதற்கு வலுவான ஆதாரம் கிடைக்காமல் அறிவியல் இந்தக் கதைகளை ஏற்றுக்கொள்ளாது. இதுகுறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இருப்பினும், கிரெக் அகிஜியனை பொறுத்தளவில், “பறக்கும் தட்டுகளைப் போன்ற அதிசயப் பொருட்கள் உண்மையானவை. அவற்றை நாம் ஒரு சமூக எதார்த்தமாக மாற்றியுள்ளோம். எனவே, அவற்றைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.