;
Athirady Tamil News

ரஷ்யாவின் அடுத்த இலக்கு யார்? அச்சத்தில் அண்டை நாடுகள் என்ன செய்கின்றன தெரியுமா?!!

0

ரஷ்யா – யுக்ரேன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகின்றன என்பதை உலகறியும்.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், எஃப்16 ரக போர் விமானங்கள் உள்ளிட்டவை இந்த ஆயுத உதவியில் அடங்கும். ஆனால், யுக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மற்றொரு உதவியான “சௌனாஸ்” பற்றி உலகம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.

ஆனால், எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், போரில் உதவி பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் யுக்ரேனுக்கு அவ்வபோது பயணம் மேற்கொண்டு வருபவருமான இல்மர் ராக், சௌனாஸ் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்.

கிரவுட் ஃபண்டிங் எனப்படும் கூட்டு நிதி திட்டத்தின் கீழ் நிதி திரட்டி அதன் மூலம் யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கு உதவும் நோக்கில் நூற்றுக்கணக்கான சௌனாஸ் அலகுகளை உருவாக்கி வருகிறார் ராக்.

“சௌனாஸ்” எனப்படும் கட்டமைப்பை யுக்ரேனிய ராணுவத்தினர் கோரியிருந்தனர்.

மரத்தினாலான நகரும் சிறு குடியிருப்பு போன்ற வடிவமைப்பு சௌனாஸ் என்று அழைக்கப்படுகிறது. ராணுவ சீருடைகளை துவைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக யுக்ரேன் ராணுவ வீரர்கள் இந்த வடிவமைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் அவர்களை உருமறைப்பு செய்ய இந்த சீருடைகள் யுக்ரேன் ராணுவ வீரர்களுக்கு பயன்படுகின்றன.

சௌனாஸ் வடிவமைப்பு குறித்து நன்கு அறிந்தவர்களாக உள்ளனர் எஸ்டோனியர்கள். ஏனெனில், போர்களின் போது அந்நாட்டில் பின்பற்றப்படும் ஒரு ராணுவ பாரம்பரியமாக இது உள்ளது.

குளிர் கால இரவுகளை சூடாக வைத்திருப்பதை போல, ராணுவ வீரர்களை சுகாதாரம் மற்றும் அவர்களின் மன உறுதியை அதிகரிக்க இந்த வடிவமைப்பு பயன்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான் பாலைவனம் மற்றும் லெபனானில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின் போது எஸ்டோனிய வீரர்கள் தங்களது நகரும் சௌனாஸ் வடிவமைப்பு இல்லாமல் பயணம் செய்திருப்பது அரிது.

இது 100 ஆண்டுகளுக்கு முன், போல்ஷ்விக்குகளுக்கு எதிரான எஸ்டோனியா போரின்போது தொடங்கிய ஒரு ராணுவ பாரம்பரியமாகும்.

அப்போது எஸ்டோனியா நாட்டின் ரயில்வே துறை சார்பில், சௌனாஸ் வசதியுடன் கூடிய ரயில் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம், நாட்கணக்கில் பதுங்கு குழியில் இருக்கும் போர் வீரர்கள் வெளியே வந்து, குளிக்கவும், தங்களைத் தாங்களே கிருமி நீக்கம் செய்து கொள்ளவும் முடிந்தது.

யுக்ரேனிய வீரர்கள் தங்களின் காலணிகளைக் கழுவாமல் அல்லது கழற்றாமல் நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் கூட களத்தில் இருப்பதை கேள்விப்பட்டதாக கூறுகிறார ராக்.

அத்தகைய சூழலில் எஸ்டோனியர்களின் சௌனாஸ் வடிவமைப்பு தங்களுக்கு கிடைக்கப் பெற்றிருப்பது “கடவுளின் வரம்” என்று யுக்ரேனிய ராணுவ தளபதி ஒருவர் பாக்முட் அருகே தம்மிடம் தெரிவித்ததாகவும் ராக் கூறினார்.
ரஷ்யா யுக்ரேன் போர்
படக்குறிப்பு,

ஆயுத பயிற்சியில் சேரும் ஃபின்லாந்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இல்மர் ராக்கை போல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் அங்கும் வகிக்கும் நாடுகளில் வசிக்கும் பலர், ரஷ்யா -யுக்ரேன் போரில், யுக்ரேனுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.

எஸ்டோனியா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளான லாட்வியா மற்றும் லிதுவேனியா, இரண்டாம் உலகப் போருக்குப் பின், பல தசாப்தங்கள் சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனவே, ரஷ்ய படையெடுப்பால் யுக்ரேனுக்கு ஏற்பட்டுள்ள வலியை தாங்கள் நன்கு உணர்ந்துள்ளதாக அந்நாட்டினர் கூறுகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட வேறு எந்த நாட்டையும்விட, யுக்ரேனுக்கு குறுகிய கால பொருளாதார உதவிகளை அளித்துள்ளனர் அல்லது அதற்கான உறுதிமொழியை வழங்கி உள்ளனர்.

ஜெர்மனியில் கீல் இன்ஸ்டிட்யூட்டின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, யுக்ரேனுக்கு அளிக்கப்பட்டு வரும் நீண்டகால உதவிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது, லாட்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளை நார்வே மட்டும் விஞ்சி நிற்கிறது. யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் அளித்துவரும் உதவிகளை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது.

டிரிஃடிங் எனப்படும் கார் பந்தய விளையாட்டில் லிதுவேனியாவின் தேசிய சாம்பியனாக திகழ்பவர் கெடிமினாஸ் இவானாஸ்காஸ். இவர் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுத்த நாளில் இருந்து யுக்ரேனிய மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் உதவி செய்து வருகிறார்.

யுக்ரேனில் பொதுமக்களை மீட்கும் பணியின்போது தான் சந்திக்கும் துன்பங்கள் குறித்து அவர் கூறும்போது அவரது கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.

தனது திறமையை பயன்படுத்தி யுக்ரேனிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பது கெடிமினாஸின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதற்கான சர்வதேச உதவிக்கான முயற்சிகள் மெதுவாக நடைபெறுவதால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

இருப்பினும், ஆட்டோமொபைல் துறையில் அவருக்கு நல்ல அனுபவம் உள்ளது. இந்த அனுபவம், லிதுவேனியாவின் புறநகர் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில், டஜன் கணக்கிலான மீட்பு வாகனங்களை நிறுவும் பொருட்டு நிதி திரட்ட கெடிமினாஸை தூண்டியது.

யுக்ரேனிய ராணுவத்துக்கு பயன்படும் விதத்தில் ஆம்புலன்ஸ் ஊர்திகள் சிலவற்றையும் அவர் சிரத்தையுடன் தயார் செய்துள்ளார்.

உக்ரைனில் போரிடுவதன் மூலம் லிதுவேனியாவைப் பாதுகாப்பதாக மின்டாகாஸ் லியுடுவின்காஸ் (இடது) கூறுகிறார்.

யுக்ரேனிய சர்வதேச படைப்பிரிவில் தன்னார்வ துப்பாக்கி சுடும் வீரரான லிதுவேனியாவைச் சேர்ந்த மிண்டாகாஸ் லியுடுவின்காஸ், யுக்ரேன் போரில் பங்கேற்பதற்கு தமக்கு வேறு காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்.

தம்மை ஒரு பெருமை மிக்க தேசபக்தராக கூறிக்கொள்ளும் அவர், யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுவதன் மூலம், தனது சொந்த நாட்டைப் பாதுகாப்பதாக மிண்டாகாஸ் நம்புகிறார்.

“நாங்கள் ரஷ்யாவை யுக்ரேனில் தடுத்தி நிறுத்தியே ஆக வேண்டும்” என்று ஆக்ரோஷமாக கூறியபடி, அடுத்த தாக்குதலுக்கான பயணத்துக்கு ஆயத்தமானார் மிண்டாகாஸ்.

யுக்ரேனிய போரின் இறுதியில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டால், புதினின் அடுத்த இலக்கு தாங்களாக இருக்கலாம் என்ற அச்சம் லிதுவேனியர்களிடம் உள்ளது.

மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் ஒரு பகுதியாக இருக்கும் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் லிதுவேனியாவும் ஒன்றாகும்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான திட்டங்கள் குறித்தும், மேற்கத்திய நாடுகளை பலவீனம் மற்றும் ஸ்திரமற்றதாகவும் ஆக்கும் புதினின் நோக்கம் பற்றியும் பல்வேறு நாடுகள் நீண்ட காலமாக உரத்த குரலில் எச்சரித்து வந்துள்ளன

இந்த போரில் உக்ரைன் பாதிக்கப்பட்டதா என்று நான் கேட்டபோது டகாவ்பில்ஸில் உள்ள ரஷ்ய இனத்தவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு வீச்சிலான தாக்குதல் நடவடிக்கைகள் நேட்டோவிற்கு புது அர்த்தத்தை அளித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள நாடுகளை சேர்த்து நேட்டோ கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற தூண்டுதலை மேற்கத்திய நாடுகளுக்கு அளித்துள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவுடன் 1,300 கிலோமீட்டர் நிலப்பரப்பை பகிர்ந்து கொள்ளும் நாடான ஃபின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய முதலில தயக்கம் காட்டிதான் வந்தது. அதன் விளைவாக ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற காரணத்தால் ஃபின்லாந்துக்கு இந்த அச்சம் இருந்திருக்கலாம்.

ஆனால், யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த துவங்கியதும். நேட்டோவில் இணைவது குறித்த தனது நிலைப்பாட்டை ஃபின்லாந்து முற்றிலும் மாற்றிக் கொண்டது. யுக்ரேன் போர் தொடங்கிய உடனே, நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடனுடன் இணைந்து ஃபின்லாந்தும் விருப்பம் தெரிவித்தது.

நேட்டோ கூட்டமைப்பில் சேர்ந்ததும் ஃபின்லாந்தில் ஆயுத பயிற்சியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு திகரித்துள்ளது. அந்நாட்டு இளைஞர்களுக்கு ராணுவ சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு, ரஷ்யா குறித்து அச்சம் தங்களுக்கு அதிகமாகி உள்ளதாக ஃபின்லாந்து மக்கள் கூறுகின்றனர்.

மேலும், யுக்ரேன் போரின் விளைவாக ஃபின்லாந்து நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பு வரை ரஷ்யர்களின் சுற்றுலா வருகையின் மூலம் ஆண்டுக்கு சுமார் 630 மில்லியன் டாலர்கள் வருவாயை இந்நிறுவனங்கள் ஈட்டி வந்தன.

ஆனால், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது ரஷ்யாவுடன் நட்புறவுடன் இருந்து வந்த பெலாரஸை போலவே, ஃபின்லாந்தும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரும் ரஷ்யர்களுக்கு விசா வழங்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

யுக்ரேன் போரில் ரஷ்யா வெற்றி பெற்று புதின் தமது அதிகாரத்தை அதிகரித்து கொண்டால் அடுத்து என்ன நடக்கும் என்று நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது என்கிறார் ஃபின்லாந்துக்கு உட்பட்ட லாப்லாந்தில் இயங்கிவரும் ரிசார்ட்டின் உரிமையாளரான அஹோ.

“ரஷ்யாவின் அடுத்த இலக்கு ஃபின்லாந்து, போலந்து, எஸ்டோனியா அல்லது லிதுவேனியாவா? என்று அச்சம் தெரிவிக்கும் அவர், யுக்ரேன் போர் தானாக நிற்காது. ஆனால் எங்களின் அச்சம் எல்லாம் யுக்ரேன் போருடன் முடிவுக்கு வந்துவிட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

ரஷ்ய அதிபர் வழக்கமான போரை மட்டும் முன்னெடுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் அல்லது தவறான தகவல் பிரசாரங்களை மேற்கொள்வதாக மாஸ்கோ மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.

இது லிதுவேனியாவைப் போல, லாட்வியா போன்ற ரஷ்யாவின் எல்லையில் உள்ள நாடுகளை பதற்றமடையச் செய்கிறது.

பெலாரஸில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், ரஷ்யாவில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது லாட்வியாவின் இரண்டாவது நகரமான டகாவ்பில்ஸ்.

இந்த நகரில் வசிக்கும் 10 பேரில் எட்டு பேர் லாட்வியனுக்குப் பதிலாக தங்களது வீடுகளில் ரஷ்ய மொழி பேசுபவர்களாகவே உள்ளனர். அதேபோன்று பெரும்பாலோர் ரஷ்ய மொழி கற்பிக்கப்படும் பள்ளிகளில் படித்தவர்கள். அவர்கள் பாராம்பரியமாக ரஷ்ய தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தி வலைத்தளங்களில் இருந்து தங்கள் செய்திகளை அறிந்து வந்தவர்களாக உள்ளனர்.

நார்வேஜியன் ஆட்கள் பெரும்பாலும் ரஷ்ய எல்லையில் காவலர்களாக பணியாற்ற அனுப்பப்படுகிறார்கள்.

லாட்வியாவின் பிற பகுதிகள போல் அல்லாமல், டகாவ்பின்ஸ் நகர வீதிகளில் யுக்ரேனிய கொடிகள் பறக்காததை காண முடிகிறது.

லாட்வியன் ரஷ்யர்கள் எந்த வகையிலும் புதினுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்றாலும், அந்த நகர வீதிகளில் செல்பவர்கள் போரைப் பற்றி பேச விரும்பவில்லை என்பது மட்டும் புரிகிறது.

ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளராகப் பார்க்கிறீர்களா, யுக்ரேனை பலியாடாகப் பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், லாட்வியாவில் உள்ள ரஷ்யர்களை, ரஷ்ய பிரசாரத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் லாட்வியன் அரசாங்கம் இறங்கி உள்ளது.

அங்கு ரஷ்ய தொலைக்காட்சி சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் ரஷ்ய மொழி கற்பித்தலும் நிறுத்தப்பட்டுள்ளது. சோவியத் காலத்திய நினைவுச் சின்னங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, பல இன ரஷ்யர்கள் அந்நியப்படுத்தப்படும் அபாயமும், அவர்கள் புதினின் கரங்களுக்குள் தள்ளப்படும் ஆபத்தும் உள்ளதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

யுக்ரேனில் போர் முடிவடைந்த பின்னரும் இதுபோன்ற சிக்கல்கள் நீடிக்கும்.

மொத்தம் 2,400 கிலோமீட்டர்கள் தொலைவு பயணித்து. “Living Next to Putin,” என்ற தலைப்பில், பிபிசி தொலைக்காட்சிக்காக படமாக்கிய இரண்டுப் பகுதி ஆவணப்படத்தின் மூலம் யுக்ரேன் -ரஷ்ய போர், எல்லை நாடுகளின் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அறிய முடிவதாக கூறுகின்றனர் கத்யா அட்லர் மற்றும் அவரது குழுவினர்.

யுக்ரேன் – ரஷ்யா இடையேயான போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மக்களின் எதிர்காலம், இப்போர் எவ்வாறு முடிவடைகிறது என்பதை பொறுத்தது.

ஆனால் அதன் பிறகு, ரஷ்யாவுடன் இந்த நாடுகள் எந்த விதமான உறவை வைத்திருக்க முடியும்? லிதுவேனியா, ஃபின்லாந்து போன்ற நேச நாடுகளுக்கு தற்போது ஆதரவு கரம் நீட்டியுள்ள நாடுகளின் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு என்னவாக இருக்கும்? என்பன போன்ற விடை காண வேண்டிய பல வினாக்கள் உள்ளன.

இவற்றுக்கு ரஷ்யாவுடன் எல்லை மற்றும் வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் யுக்ரேனின் ஒவ்வொரு நட்பு நாடும் மிகவும் கவனமாக சிந்தித்து விடை காண வேண்டிய அவசியம் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.