யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குறுந்திரைப்படங்கள் நாளை திரையிடப்படவுள்ளன
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திரையிடப்படவுள்ளன.
போர்ச்சூழலில் தனது மகனைப் பாதுகாக்கப் போராடும் ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தைத் தாங்கிநிற்கும் ‘நான்காம் போர்’,
நாட்டின் நிலைமை காரணமாகப் பல ஆண்டுகளாகத் தனது மகளைக் காணாமலிருந்த தந்தையின் பரிதவிப்பை வெளிப்படுத்தும் ‘அன்பின் நிழல்’,
அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை மையப்படுத்திய ‘லிசா’,
கணவன் இன்றி தன் மகளோடு வாழும் பெண் எவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறாள் என்பதைச் சொல்லும் ‘கம்பளிப் பூச்சி’, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மதகுரு ஒருவர் பற்றிய உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இன நல்லிணக்கத்தை எடுத்துக்கூறும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘ஆஸ் ஏ தேர்ட் பேர்சன்’,
தாயின் கனவைச் சொல்லும் ‘சப்பாத்து’, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குத் தாய் அனுபவிக்கும் வலிகளையும், வேதனைகளையும் கூறும் ‘அந்தக் கணம்’, மலையகத்தில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ‘வேட்கை’, காணாமல் ஆக்கப்பட்ட போராளி ஒருவரது குடும்பம் எதிர்கொள்ளும் அவலங்களின் கதையான ‘கணையாழி’, மனிதர்களின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும் வேளையில் வெவ்வேறு தேவைகளையுடைய இருவர் ஒன்றாகச் சந்தித்துக்கொள்ளும் கதையான ‘டிப்ரன்ட்’ ஆகிய குறுந்திரைப்படங்கள் இதன்போது திரையிடப்படவுள்ளன.
குறுந்திரைப்படங்களை காண குறித்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.