;
Athirady Tamil News

இந்தியாவால் தேடப்பட்ட நபர்களை கனடா, பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது யார்? எப்படி?

0

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப் வாகனம் நிறுத்தும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலையை உறுதி செய்த போலீசார், அடையாளம் தெரியாத இரண்டு பேர் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

நிஜ்ஜார் சர்ரேயில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராகப் பதவி வகித்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

இந்த கொலைக்கு சிரோமணி அகாலிதளத்தின் முன்னாள் எம்எல்ஏவும் அக் கட்சியின் செய்தி தொடர்பாளருமான விர்சா சிங் வால்டோஹா உள்பட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “நிஜ்ஜார் ஒரு சமூகத்தின் மத உறுப்பினராகவும், குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார். இந்த சம்பவம் எப்படி, ஏன் நடந்தது என்பதை கண்டறிய ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்,” எனத்தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தில் உள்ள இந்த வீட்டில் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர்.

இந்திய அரசு இப்படித் தான் அவரைப் பற்றிச் சொல்கிறது:

நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப் படையில் உறுப்பினராக இருந்தார். காலிஸ்தான் புலிப்படையினர் எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும் நெட்வொர்க்கிங் குறித்தும் பயிற்சி அளிப்பது மற்றும் நிதி உதவி அளிப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
பஞ்சாப் மாநில அரசு என்ன சொல்கிறது?

நிஜ்ஜாரின் சொந்த கிராமமான பார் சிங் புராவில் உள்ள நிலங்கள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைப்பற்றப்பட்டன. 2020ல் தனி காலிஸ்தான் தேசத்திற்கான ‘சீக்கிய வாக்கெடுப்பு 2020’ என்ற ஆன்லைன் பிரச்சாரத்தில் நிஜ்ஜார் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ‘ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்’ (சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்) என்ற அமைப்பு நடத்தியது.

நிஜ்ஜார் 1997 இல் கனடாவை அடைந்தார். அங்கு தனது தொடக்க காலத்தில் அவர் பிளம்பர் ஆக வேலை பார்த்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு முன்பு அவரது பெற்றோர் சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.

இந்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏவின் கூற்றின்படி, நிஜ்ஜார் 2013-14ல் பாகிஸ்தானுக்குச் சென்றார் என்பதுடன் அங்கு அவர் காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஜகத் சிங் தாராவைச் சந்தித்தார் என்று தெரியவருகிறது.

இதற்கிடையில், அவர் தொடர்ந்து இந்திய அரசின் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் தேடப்படும் நபர்கள் பட்டியலில் வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட முதல் நபர் அல்ல.

நிஜ்ஜார் முதல் ஜாகூர் மிஸ்திரி வரை இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.

காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பலரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ஜூலை 2020 இல், இந்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஒன்பது ‘பயங்கரவாதிகள்’ பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஒருவர் பஞ்ச்வாட் என்கிற பரம்ஜித் சிங் பஞ்ச்வாட்.

பஞ்சாபின் டார்ன் தரனில் பிறந்த பரம்ஜித் சிங், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ‘காலிஸ்தான் கமாண்டோ படை’யின் முக்கியத் தலைவராக இருந்தார்.

பரம்ஜித் சிங் மற்றும் காலிஸ்தான் கமாண்டோ படைகள் இந்த ‘பயங்கரவாத தாக்குதல்களில்’ ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன், 1988ல் சில அரசியல்வாதிகளின் கொலை.

ஃபிரோஸ்பூரில் 10 ராய் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

1988 மற்றும் 1999 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள்.

இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் லாகூரில் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மே மாதம் ஒரு நாள் காலை நேரத்தில், பஞ்ச்வாட் நடைபயிற்சிக்கு சென்றபோது அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுடப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, “பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் ஒரு துப்பாக்கி ஏந்திய நபரால் தலையில் சுடப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனைக்குச் சென்றதும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்,” என்று தெரியவருகிறது.

இந்த தாக்குதலில் அவரது காவலரும் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் வீட்டு வாசலில் நடந்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அல் பாதர் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்தவருமான சையத் காலித் ரஜா, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

கராச்சி நகரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஃபைசுல்லா கானின் கருத்துப்படி, சையத் காலித் ரஜா கராச்சியில் வாழும் பிஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்.

“90 களின் முற்பகுதியில், ஆஃப்கானிஸ்தானில் அல் பாதர் அமைப்பின் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இந்திய வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் செயல்களில் காலித் ரஜா ஈடுபட்டார். ஆனால் 1993 இல் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு, அவர் பெஷாவருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் அந்த அமைப்பின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டார்,” என ஃபைசுல்லா கான் கூறுகிறார்.

அல் பாதர் முஜாஹிதீன் என்ற அமைப்பு, ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆயுதப் பிரிவாக செயல்பட்டு, 80களின் முற்பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானிலும் பின்னர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் இயங்கி வருகிறது.

அல் பாதர் முஜாஹிதீன் என்ற அமைப்பு, ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆயுதப் பிரிவாக செயல்பட்டு, 80களின் முற்பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானிலும் பின்னர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் இயங்கி வருகிறது.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அல் பாதர் முஜாஹிதீன் அமைப்பு ஜமாத்-இ-இஸ்லாமியிலிருந்து 90களின் பிற்பகுதியில் பிரிந்து தனி இயக்கமாக உருவெடுத்தது.

ஃபைசுல்லா கானின் கூற்றுப்படி, 90 களின் பிற்பகுதியில் சையத் காலித் ரஜா கராச்சி பிரிவுக்கான அல் பாதரின் தலைவராக அறிவிக்கப்பட்டபோது, ​​அவர் முழு மாநிலத்திலும் அந்த அமைப்பின் முக்கிய தலைவராக இருந்தார்.

9/11 தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஜிஹாதி அமைப்புகள் தடைசெய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சையத் காலித் ரஜாவும் ஒருவராக இருந்தார். இதையடுத்து, சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின், தீவிரவாத செயல்களில் இருந்து ஒதுங்கி, கல்வித்துறையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

கல்வித் துறையில் அவர் பணியாற்றி கொண்டிருந்த போது, 2023 பிப்ரவரி 26 அன்று கராச்சியின் கிழக்கு மாவட்டமான குலிஸ்தான் ஈ ஜோஹரில் அவர் வீட்டில் இருந்தபோது வீட்டு வாசலில் நடந்த பயங்கர தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

முன்னாள் காஷ்மீர் ஜிகாதி கமாண்டரான சையத் காலித் ரஜாவின் (55) வாழ்க்கை அன்று முடிவுக்கு வந்தது.

அவருடைய கொலைக்கான பொறுப்பை, பாகிஸ்தான் அரசுக்கு எதிரான, பிரிவினைவாத ஆயுத அமைப்பான சிந்து தேஷ் ராணுவம் ஏற்றுக்கொண்டது.

ஹிஸ்புல் முஜாகிதீனின் காஷ்மீர் கமாண்டர் பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீனின் காஷ்மீர் கமாண்டர் பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள ராவல்பிண்டி நகரில் மக்ரிப் (சூரிய அஸ்தமனம்) தொழுகைக்குப் பிறகு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ​​அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.

60 வயதான பஷீர் அகமது, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 80களின் பிற்பகுதியில் இருந்து காஷ்மீரி ஜிகாதி அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

90 களின் முற்பகுதியில், பஷீர் தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் குடியேறினார். காலப்போக்கில் அவர் ஹிஸ்புல் முஜாஹிதீனின் செல்வாக்கு மிக்க தளபதியாக ஆனார்.

இந்திய அரசு சார்பில் இம்தியாஸ் ஆலம் என்கிற பஷீர் அகமது பீர், உபா (UAPA) சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பை 2022 அக்டோபரில் இந்திய அரசு வெளியிட்டது.

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2022 ஆம் ஆண்டில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் காருக்குள் ரிபுதமன் சிங் சுடப்பட்டார்.

அந்த இடத்தில் எரிந்த நிலையில் இருந்த வாகனத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

1985 ஆம் ஆண்டு கனிஷ்கா விமான குண்டுவெடிப்பில் மாலிக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இருப்பினும், ரிபுதமன் சிங் மாலிக், தனக்கு இந்த தாக்குதலில் எந்த தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டில், மாலிக்கும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான அஜய்ப் சிங் பக்ரியும் விடுவிக்கப்பட்டனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டது சீக்கியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூன் 23, 1985 அன்று, காலிஸ்தானி பிரிவினைவாதிகள் மாண்ட்ரீலில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமான கனிஷ்காவில் டைம் பாம் வைத்தனர்.

இதையடுத்து, அயர்லாந்து கடற்கரை அருகே பறந்துகொண்டிருந்த விமானம் வெடித்து சிதறியதில் 329 பேர் உயிரிழந்தனர்.

ரிபுதமன் சிங் மாலிக் இந்தியாவை விட்டு வெளியேறி 1972 இல் கனடாவை அடைந்து ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இதற்குப் பிறகு, மாலிக் ஒரு பெரிய தொழிலதிபரானார். பின்னர் வான்கூவரின் ‘கல்சா கிரெடிட் யூனியன்’ என்ற அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரிபுதாமனின் பெயர் ‘பிளாக் லிஸ்ட்டில்’ இருந்தது.

2019 செப்டம்பரில், மோதி அரசு 35 ஆண்டுகால பிளாக் லிஸ்ட்டில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் 312 சீக்கியர்களின் பெயர்களை நீக்கியது.

இதற்குப் பிறகு, 2019 டிசம்பரில், ரிபுதமன் சிங் மாலிக் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த ஜாகூர் மிஸ்திரி பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்து காபூலுக்கு இந்திய விமானத்தைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் ஜாகூர் மிஸ்திரி இப்ராகிம் ஈடுபட்டார்.

கடத்தல்காரர்கள் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனத் தலைவர் மௌலானா மசூத் மற்றும் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஷ்டாக் சர்கார் மற்றும் உமர் சயீத் ஷேக் ஆகிய இரு தளபதிகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த ஜாகூர் மிஸ்திரி படுகொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அக்தர் காலனியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் அவர் சுடப்பட்டார்.

ஒரு நாட்டில் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்படுபவர்கள் வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து கொலை செய்யப்படும் போது அது பேசுபொருளாகிறது.

உள்ளூர் காவல்துறை, “நான்கு பேர் பர்னிச்சர் கடைக்குள் நுழைந்து, ஒரு தொழில் அதிபர் மீது நான்கு அல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். உயிரிழந்தவர், 44 வயதான ஜாஹிட் என அடையாளம் காணப்பட்டார்,” எனக்கூறுகிறது.

ஆனால், கொல்லப்பட்ட தொழிலதிபர் இப்ராஹிம் தான் என்றும், அவர் பல ஆண்டுகளாக ஜாஹித் அகுன்ட் என்ற மாற்று அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் இந்திய அதிகாரிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.