;
Athirady Tamil News

மாதவரம் பஸ் நிலையம் மந்தமாக மாறிய பரிதாபம்… சேவையை அதிகரிக்க முடியாமல் திணரும் அதிகாரிகள்!!

0

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் மேம்பாலம் அருகில் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ரூ. 93 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தான் ஆந்திராவுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பயணிகள் மத்தியில் முழுமையான வரவேற்பு இல்லை.

மாதவரம் பஸ் நிலையம் திறக்கப்பட்டபோது கோயம்பேட்டில் இருந்து ஆந்திராவுக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து துறைக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. நாள் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏற்கனவே இருந்தது போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் திருப்பதிக்கு பஸ்களை இயக்கினார்கள். மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்தும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாதவரம் பேருந்து நிலையத்துக்கு ஒவ்வொரு நாளும் வார இறுதி நாட்களில் 6500 பேர் வரை வந்து செல்கிறார்கள். மற்ற நாட்களில் 6 ஆயிரம் பேர் வரை வருகை தருகிறார்கள். ஆனால் மாதவரம் பேருந்து நிலையத்தில் தினமும் 12,500 பேர் வரை வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் முறையான திட்டமிடல் இல்லாததால் பயணிகளின் வருகை இந்த பேருந்து நிலையத்தில் மிகவும் குறைவாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்சென்னை பகுதிகளுக்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. திருவான்மியூர், அடையாறு, தரமணி, பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து முறையான பஸ் வசதி இல்லை என்பது பயணிகளின் நீண்டநாள் குறையாகவே உள்ளது. இதேபோன்று கிழக்கு சென்னை பகுதிகளுக்கும் போதிய பஸ் வசதி இல்லாமலேயே உள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.

செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் சிலவற்றை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கலாமா? என்று யோசனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் செங்குன்றம் பகுதியில் இருந்து அதிகம் பேர் பயணிப்பதை கருத்தில்கொண்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் கூடுதல் பஸ் சேவையை அதிகரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முறையாக பயன்படுத்தினால் வருவாய் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். திருப்பதிக்கு செல்லும் தென் சென்னைவாசிகள் மற்றும் சென்னை கிழக்கு பகுதியில் வசிப்பவர்கள் யாரும் மாதவரம் பேருந்து நிலையத்துக்கு சென்று அங்கிருந்து திருப்பதி செல்வதற்கு விரும்புவதில்லை.

அவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே திருப்பதிக்கு செல்ல விரும்புகிறார்கள். இதற்கு காரணம் முறையான மாநகர பஸ் வசதிகள் இல்லாததே என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதன் காரணமாக மாதவரம் பஸ் நிலையத்தில் இறங்கி வீடுகளுக்கு கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்ல நேரிடுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் முறையாக மாநகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

பயணிகளின் இதுபோன்ற கோரிக்கையை பரிசீலித்து மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முழுமையாக பயன்படுத்தினால் அதன் மூலமாக வருவாய் அதிகரிப்பதுடன் கோயம்பேட்டில் இருப்பது போன்று மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் வாடகைக்கு கடைகளை அமைத்து கொடுத்து அதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.