;
Athirady Tamil News

காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்!!

0

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணை பகுதிகளில் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் இறங்கியும், சாலைகளில் டயரை தீயிட்டு எரித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று முடிவு செய்ததும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையே மீண்டும் நேற்று முன்தினம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். குறிப்பாக பெங்களூரு காந்திநகர், மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா என்ற பகுதியில் மேலக்கோட்டை சுயேச்சை எம்.எல்.ஏ., தர்ஷண புட்டண்ணா என்பவரது தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.

பெங்களுருவில் கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் நாராயண கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் மைசூரு, மற்றும் மாண்டியாவின் பல பகுதிகளில் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாண்டியாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களும் ஓடவில்லை. இதனால் மக்கள் கூட்டம் இன்றி நகரமே வெறிச்சோடியது. மேலும் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்க பட்டணா, கண்ணம்பாடி, கிருஷ்ணராஜ சாகர், மைசூரு, கபினி அணை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.