;
Athirady Tamil News

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் : சுரேஷ் க.பிரேமச்சந்திரன்

0

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்தார்.

அண்மையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதியே நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவத்திற்கு குறிப்பாக தமிழர்களின் மரபுரிமையைக் காப்பதற்காக வழங்கப்பட்ட நீதிமன்றக் கட்டளையை மாற்றியமைக்குமாறு விடுக்கப்பட்ட அழுத்தங்களையும் உயிரச்சுறுத்தலையும் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு

தமிழ் மக்களுக்கான நீதி
“முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி திரு.ரி.சரவணராஜா அச்சுறுத்தப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை பிரதேசத்தை சிங்களமயப்படுத்துவதற்கு புத்த பிக்குகள் எடுத்த முயற்சியை சட்டத்தின் அடிப்படையில் நின்று அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது அவருக்கு மேல் புத்தபிக்குகள் சினம்கொள்வதற்குக் காரணமாக அமைந்தது.

குறைந்தபட்சம் நீதிமன்றங்களினூடாக தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நீதி, நியாயத்திற்குக்கூட இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக வேட்டு வைக்கப்பட்டுள்ளது.

மாபெரும் போராட்டம்
இலங்கையின் நீதித்துறையைக் களங்கப்படுத்துவது மாத்திரமல்லாமல் தமிழ் மக்களுக்கு தமது சொந்த இடத்திலும் நீதிகிடைக்கமாட்டாது என்ற நிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினது ஜனநாயகவிரோத, தமிழ் மக்கள் விரோத இத்தகைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் வன்மையாகக் கண்டிப்பதை வெளிப்படுத்தும் முகமாக வருகின்ற 4ஆம் திகதி மருதனார்மடம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவை இணைந்து தீர்மானித்துள்ளது.

ஆயிரக்கணக்கில் நாங்கள் ஒன்று திரண்டு இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்வதினூடாக எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துவோம்.

காலை 9.00 மணிமுதல் 10.00மணிவரை நடைபெறவுள்ள இந்த மாபெரும் போராட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பாக அன்புடன் அறைகூவி அழைக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.