;
Athirady Tamil News

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட 21 நாடுகள்

0

இஸ்ரேலின் காசா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அயர்லாந்து, நோர்வே, கட்டார் உட்பட 21 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரிப்பது குறித்து சர்வதேச சமூகம் கவலை வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது குண்டுவீசியும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைத் தாக்கியும் வருகிறது.

ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம்
இந்த நிலையில் பல நாட்டு அரசாங்கங்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், “சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் காற்றில் பறக்க செய்துள்ளது.

பாலஸ்தீன மக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் உடனடியாக களமிறங்க வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என அறிவித்துள்ளது.

மனிதாபிமானமற்ற நடவடிக்கை
இஸ்ரேலின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஏற்பதாக இல்லை என பிரேசில் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு கியூபா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததே இந்த வன்முறைகளுக்கு காரணம் என இந்தோனேசியா விமர்சித்துள்ளது.

ஈரானும், ஈராக்கும் தங்களின் பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு விநியோகத்தை தடுப்பது என்பது மனிதத்தன்மையற்ற செயல் என அயர்லாந்து பிரதமர் Leo Varadkar இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்த நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவைத் கேட்டுக்கொண்டுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு என மொராக்கோ அறிவித்துள்ளது.

மேலும், மலேசியா, மாலத்தீவு, நோர்வே, ஓமன், கத்தார், ரஷ்யா, சிரியா, தென்னாப்பிரிக்கா, வெனிசுலா ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.