;
Athirady Tamil News

தெரு நாய்களுக்கு யார் பொறுப்பு? சட்டம் என்ன சொல்கிறது?

0

நாட்டின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் ஒன்றான வாக்பகாரி டீ குழுமத்தின் இயக்குநர் பராக் தேசாய், நடைப்பயிற்சி சென்றிருந்தபோது தெரு நாய்கள் துரத்தியதில், கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து மரணமடைந்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், அக்டோபர் 15ஆம் தேதி தனது வீட்டுக்கு வெளியே நடைப்பயிற்சி சென்றிருந்தபோது தெரு நாய்கள் துரத்தியதால், அவற்றிடமிருந்து தப்பிக்க ஓடியிருக்கிறார். அப்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மூளையில் ரத்தக்கசிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சில நாள்களுக்கு முன்பு பராக் தேசாய் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அது முதல் தெரு நாய்கள் தொடர்பான புகார்களும் குற்றச்சாட்டுகளும் சமூக ஊடகங்களில் குவிந்து வருகிறது. நாட்டில் தெரு நாய்களுக்கு பலியான முதல் நபர் இவர் இல்லை என்றாலும், இதுவரை அப்பாவி பொதுமக்கள்தான் பலியான நிலையில், நான்காம் தலைமுறை தொழிலதிபர் ஒருவர் பலியானதால், தெரு நாய்கள் பிரச்னை அதிகக் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை எட்டியுள்ளது, மக்கள் தொகையை விட, ஒப்பீட்டளவில் சிறிய நிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதே மிகப்பெரிய சவாலாக உள்ளது.

மனிதர்களுக்கான அடிப்படை வசதிகளும், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளும் பல பகுதிகளில் இன்னமும் கவலைதரும் வகையில்தான் உள்ளன. அந்த வகையில், இங்கு விலங்குகள் பராமரிப்பு மற்றும் விலங்குகளுக்கான கருத்தடை விவகாரங்கள் முறையாகக் கையாளப்படுவதில்லை.

இதனால், பல இடங்குகளில் தெருவோர விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, அவ்வப்போது மனிதர்கள் – விலங்குகள் இடையே மோதலும் நிலவுகிறது. விலங்குகள் என்றால் முதலிடத்தில் இருப்பது தெருவோர நாய்கள்தான்.

நாட்டில் கிட்டத்தட்ட 4 கோடி அளவுக்கு தெரு நாய்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓராண்டில் சுமார் 4 ஆயிரம் பேர் நாய்க்கடியால் மரணமடைகின்றனர் என்றும், ஒரு கோடிக்கும் அதிகமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிகிறது. தெரு நாய்கள் மற்றும் நாய்க்கடிக்கு அதிகம் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருந்தாலும் கூட, அது தீவிரமாகச் செயல்படுத்தப்படுவதில்லை. இதனாலேயே அதிகமான தெருநாய்கள் உருவாகி, அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்காமல் நாய்களுக்குள் சண்டையிட்டு, வெறிபிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

தெருநாய்கள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய சட்டப்படி, தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது சட்டவிரோதமானது மற்றும் நாய்களை விரட்டக் கூடாது. எனவே, ஒரு நாய் தெருவில் வந்துவிட்டால், அந்த நாயை யாராவது தத்தெடுத்தால் ஒழிய, அது அங்கேயே தங்குவதற்கு முழு உரிமை உள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தொல்லையாக இருந்தால், மாநகராட்சி ஊழியர்கள் நாய்களைக் கொல்லலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(ஜி) கூறுவது என்னவென்றால், “வனவிலங்குகளைப் பாதுகாப்பதும், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்.”

தெருநாய்களுக்கு உணவளிப்பது சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டதுதான் என்றும், மக்கள், தங்களது குடியிருப்புப் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு சென்று கருத்தடை செய்யலாம் என்றும், ஆனால் அதன்பிறகு, எங்கிருந்து நாய்கள் கொண்டு செல்லப்பட்டதோ, அவ்விடத்திலேயே கொண்டு சென்று விட வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.