;
Athirady Tamil News

யாழில் இராணுவத்தினர் விடுவித்த காணியை உரிமைகோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்; அதிர்ச்சியில் மக்கள்!

0

அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை
கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதி இராணுவம் வெளியேறிய நிலையில் , அப்பகுதி மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்தி , எல்லைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (26) பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் அப்பகுதிக்கு வந்து, இந்த காணிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரியது, நாம் கடந்த 40 வருட காலத்திற்கு முன்பே காணி உரிமையாளர்களிடம் இருந்து காணிகளை கொள்வனவு செய்து கொண்டு விட்டோம் என கூறி தனியாரின் காணிகளை தமது காணிகள் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அதிர்ந்துபோன காணி உரிமையாளர்கள், காணியை நாம் யாருக்கும் விற்கவில்லை இது எங்களின் காணிகள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி தமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ள காணிகளே என கூறி இருந்தனர். அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள்.

இந்த காணிகளையும் தமது நிறுவனம் கொள்வனவு செய்து விட்டதாக கூறி , இது உங்கள் காணி தான் என்பதற்கு எங்களுக்கு உறுதியை காண்பித்து , உறுதிப்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.

எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை- மனம் குமுறும் உரிமையாளர்கள்
அதற்கு காணி உரிமையாளர்கள் நாங்கள் எதற்கு உங்களுக்கு உறுதி காட்ட வேண்டும் ? உங்களின் உறுதிகளை பரிசீலித்து உங்கள் காணி எங்கே இருக்கிறது என்பதனை உறுதிப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு என காட்டமாக கூறினர். அதனை அடுத்து , இந்த காணிகளையும் கொள்வனவு செய்து விட்டோம். அதற்கான உறுதிகள் எங்களிடம் உள்ளது.

அதன் ஆதாரங்களுடன் வருகிறோம் என அங்கிருந்து சென்றனர். அதேவேளை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர் தங்குமிடம் இருந்த பகுதிக்கு அருகில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணி இருந்தது.

அந்த காணி எமது காணிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. ஆனால் நாங்கள் தற்போது துப்பரவு செய்து அறிக்கைப்படுத்தும் காணிகள் எமது சொந்த காணிகளே , அந்த காணிகளை நாம் எந்த காலத்திலும் எவருக்கும் விற்கவில்லை என மனம் குமுறுகின்றனர் காணி உரிமையாளர்கள்.

அதிகாரிகள் காணி இடத்தினை மாறி விளங்கிக்கொண்டு வந்து எம்முடன் கதைத்தார்களா ? அல்லது 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் எமது காணி அகப்பட்டு இருந்த கால பகுதியில் எமது காணிகளை மோசடியாக அபகரித்து விட்டார்களா எனும் சந்தேகம் எமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் காணிகளை கொள்வனவு செய்த ஆதாரத்துடன் வருகிறோம் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். இனி அவர்கள் வந்தாலே எமக்கு உண்மை நிலை தெரிய வரும் என அக்காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.