;
Athirady Tamil News

திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

0

திருகோணமலை – கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசங்களுக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறி்த்த பகுதியில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இன்மையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15,000இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி
இந்த பகுதியில் இடம்பெறுகின்ற அகால மரணங்களின்போது அவற்றை விசாரணை செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் இல்லாததன் காரணமாக சடலத்தை திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் வறிய மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதோடு சடலத்தை அடக்கம் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கும் நீண்டகாலமாக அலைய வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, வயது முதிர்ந்தோர், நோயாளர்கள் வீடுகளில் உயிரிழந்தால் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய இறப்பு அறிக்கையை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆகவே மொரவெவ – கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக திடீர் மரண விசாரணை அதிகாரியொருவரை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.