;
Athirady Tamil News

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ மக்கள் பணம் வீண் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

0

ரயில் நிலையங்களில் பிரதமா் படத்துடன் ‘செல்ஃபி பூத்’ (தற்படம் எடுப்பதற்கான இடம்) அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ரயில் நிலையங்களில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமா் மோடியின் ஆளுயர ‘கட் அவுட்’ களுடன் ‘செல்ஃபி பூத்’ வைக்கப்பட்டுள்ளன. சிறிய ரயில் நிலையங்களில் தலா ரூ.1.2 லட்சம் செலவிலும், பெரிய ரயில் நிலையங்களில் தலா ரூ.6.25 லட்சம் செலவிலும் இந்த ‘செல்ஃபி பூத்’ வைக்க செலவிடப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி அரசின் சுயவிளம்பர திட்டம் எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ரயில் நிலையங்களில் மோடியின் முப்பரிமாண படங்கள் வைக்கப்பட்டு, அதனுடன் மக்களை படம் எடுத்துக் கொள்ளச் செய்கிறாா்கள். இதன் மூலம் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்திலும், வறட்சியிலும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. பல மாநிலங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. ஆனால், இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவிட்டு வருகிறது. தனது தோ்தல் ஆதாயத்துக்காக மக்களின் வரிப் பணத்தை அரசு வீணாக்குகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.