;
Athirady Tamil News

அடுத்த வாரத்தில் கிரக பிரவேசம்.. நொடியில் சரிந்து விழுந்த 3 மாடி வீடு: கதறி அழும் குடும்பத்தினர்

0

3 மாடி கொண்ட அடுக்கு மாடி கட்டடம் திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வாரத்தில் புதுமனை புகுவிழா
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அரசு வழங்கியுள்ளது. அந்தவகையில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் பட்டா நிலத்தை அரசு வழங்கியுள்ளது.

இதில் கணவரை இழந்த சாவித்திரி, மகள் சித்ரா மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சாவித்திரி தனக்கு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவில் 3 அடுக்குமாடிக் குடியிருப்பு காட்டி வருகின்றார். இதன் பணிகள் நிறைவடைந்து பிப்ரவரி 1ம் ததிகதி புதுமனை புகுவிழா நடத்த சாவித்திரி குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

சரிந்து விழுந்த வீடு
சாவித்திரி வீட்டின் பின்பகுதியில் உள்ள உப்பனாறு கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை பொதுத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாயை தூர்வாரும் பணி நடைபெற்றதில் சாவித்திரியின் வீடு எதிர்பாராத விதமாக லேசாக சாய்ந்துள்ளது.

பின்னர், அருகில் இருந்தவர்கள் அதை பார்த்து ஓடினர். இதை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே 3 மாடி வீடு சரிந்து கால்வாயில் விழுந்தது. ஆனால், அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பேசிய அவர், “3 மாடி கட்டடம் கட்டும் போது அஸ்திவாரம் பலமாகப் போடவேண்டும். ஆனால், இங்கு சரியாகப் போடப்படாததாலேயே கட்டிடம் இடிந்து விழுந்தது. வீட்டை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

வீட்டை இழந்த சாவித்திரி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் இத்தனை ஆண்டு உழைப்பு மொத்தமும் போய்விட்டதாக கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.