புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
சுதந்திர தேவி சிலை: பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் செய்யறிவு விடியோவாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் சரிந்து விழுந்தது உண்மையென்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பிரேசில், குவாய்பா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் 24 மீட்டர் உயர பிரம்மாண்ட சுதந்திர தேவியின் சிலை இருந்தது.
இந்த நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் உருவான புயல் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடானது. இந்த புயலானது கடந்த திங்கள்கிழமை குவாய்பா பகுதியைக் கடக்கும் போது, பலத்த காற்று வீசியுள்ளது.
இதன்காரணமாக, 24 மீட்டர் உயர சுதந்திர தேவியில் சிலை சரிந்து தரையில் விழுந்து, துண்டுதுண்டாக உடைந்தது.
இந்த சிலை அசையத் தொடங்கியவுடன் வணிக வளாகத்தின் நிர்வாகத்தினர் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், அனைத்து தொழில்நுட்ப தர நிலைகளையும் பின்பற்றிதான் இந்த சிலை அமைக்கப்பட்டதாக வணிக வளாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில், பிரேசில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு 11 மீட்டர் அடித்தளத்தில் 24 மீட்டர் உயர சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டது. மொத்தம் 114 அடி உயரமாகும்.