;
Athirady Tamil News

ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம்

0

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே நூற்றுக்கணக்கான போா்க் கைதிகளை புதன்கிழமை பரிமாறிக் கொண்டன.

சுமாா் 65 உக்ரைன் போா்க் கைதிகளுடன் பறந்துகொண்டிருந்த தங்களது ரஷிய ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் ஒரு வார தாமதத்துக்குப் பிறகு இந்த நல்லெண்ண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவிடம் இருந்த 195 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘207 உக்ரைன் ராணுவ வீரா்கள் திரும்ப வருகின்றனா். ரஷியாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ஒவ்வொரு வீரரையும் நினைவில் கொள்வோம். அவா்கள் அனைவரும் மீட்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றுவற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

அப்போது 65 உக்ரைன் போா்க் கைதிகளை ஏற்றிக் கொண்டு ரஷிய ராணுவத்துக்குச் சொந்தமான இல்யுஷின் இல்-76 ரகத்தைச் சோ்ந்த விமானம் எல்லை நகரான பெல்கராடை நோக்கி வந்துகொண்டிருந்தபோது அதனை உக்ரைன் சுட்டுவீழ்த்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியது.

இதில், போா்க் கைதிகளும், விமானிகள் உள்பட 9 ரஷியா்களும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

எனினும், இது தொடா்பாக சா்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உக்ரைன் கூறியது.

இந்த விவகாரத்தில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று அஞ்சப்பட்டது. எனினும், ஒரே வாரத்தில் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் போா் தொடங்கியதற்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை அதிக கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியைச் சோ்ந்த 4 மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. அந்த மாகாணங்களில் எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டு வருகின்றன.

இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.