;
Athirady Tamil News

யாழ் போதனா வைத்தியசாலையில் திருப்பினுப்பப்படும் கிளினிக் நோயாளர்கள்

0

யாழில் தாதியர் வேலை நிறுத்தத்தினால் கிளினிக் நோயாளர்களுக்கான எந்த சிகிச்சைகளும் நடைபெறவில்லை.

கிளினிக் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் சிகிச்சைகள் எவையும் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

இந்த நிலை அடுத்துவரும் சில நாட்களுக்கு தொடரும் என நோயாளர்களிடையே கருத்துக்கள் பரவியிருப்பதும் அதற்கான தெளிவுபடுத்தல்கள் எவற்றையும் வைத்தியசாலை நிர்வாகம் செய்யவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

கிளினிக் நோயாளர்களுக்கான அறுவுத்தல்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைக்காக செல்லும் தேவையுடையோர் வைத்தியசாலையில் தொடர்பு கொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்த பின் செல்வது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க உதவும் என சமூக அக்கறையுடையோரால் கோரப்படுகின்றது.

இணையத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கத்தினைப் பெற்ற முடியும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.021 2223 348 என்ற தொலைபேசிக்கு அழைத்துப் பேசி பயணங்களை திட்டமிடுமாறும் கிளினிக் நோயாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கண்ணுற்ற சமூக விடய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலை என்பது வடமாகாண மக்களுக்கான சேவைகளை வழங்கி வரும் தன்மைகளை கொண்டு வளர்ந்து வருகின்றது என யாழ் போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள் சிலர் அண்மையில் யாழ்.மருத்துபீடத்தில் நடைபெற்றிருந்த ராஜ் ராஜரட்ணத்தின் சமனற்ற நீதி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தங்கள் உரைகளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர் என்பதும் நோக்கத்தக்கது.

தூர இடத்தில் இருந்து வந்தவர்கள் எதிர்கொள்ளும் துயர்
வடமாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு,மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டத்திலுள்ள மக்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகளைப் பெற்று பயனடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01.02.2024 அன்றைய பொழுதில் வடமாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் வருகை தந்திருந்த கிளினிக் நோயாளர்கள் திருப்பியனுப்பப்ட்டதனை அவதானிக்க முடிகின்றது.

முல்லைத்தீவில் இருந்து அதிகாலை வேளையில் பேரூந்தை பிடித்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையை அழைத்து வந்திருந்த ஒருவர் தன் தந்தையை கிளினிக் சிகிச்சைக்காக உள் எடுக்கப்படாது விட்டதால் மீண்டும் முல்லைத்தீவுக்கே திரும்பிச் செல்லும் நிலையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.

இன்றைய பொழுதில் வேலையிழப்போடு தந்தைக்கான கிளினிக் சிகிச்சையை பெற முடியாததால் மனவுழைச்சலுக்கு ஆளாவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மல்லாவியில் இருந்து வந்திருந்த மற்றொருவருக்கும் இதே நிலை ஏற்பட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் கிளினிக் நோயாளர்கள் வந்து கிளினிக் சிகிச்சையைப் பெறமுடியாததால் திரும்பிச் செல்ல நேரிட்டதனையும் அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கே தாதியரின் வேலைநிறுத்தத்தால் இன்று கிளினிக் நடைபெறாது என தெரியாத போது வெளிமாவட்டங்களில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும் என தன் ஆதங்கத்தினை ஒரு நோயாளியின் உதவியாளர் வெளியிட்டதையும் இங்கு குறிப்பிடல் பொருத்தமானதாகும்.

கிளினிக் நோயாளர்களின் கவலை
திகதியிடப்பட்ட கிளினிக் நோயாளர்களுக்கு தாதியரின் வேலைநிறுத்தம் தொடர்பாக குறிப்பிட்டு கிளினிக் சிகிச்சைக்கான அவர்களது பயணங்களை தவிர்க்கும் படி அவர்களுக்கு எந்த தகவல்களையும் வைத்தியசாலை வழங்காது இருந்ததால் கிளினிக் நோயாளர்கள் தங்கள் ஆதங்கங்ளை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதங்களில் சந்திரசிகிச்சை செய்து கொண்டவர்களும் சிறுநீரக நோய், நீரிழிவு, இதயம் சார்ந்த நோய்களுக்கானது என பலதரப்பட்ட நோய்களுக்கான கிளினிக் சிகிச்சைகள் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

நோயாளர்களுக்கு கிளினிக் திகதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை வழங்கி வைப்பதற்கும் எந்தவொரு ஏற்பாட்டினையும் யாழ்.போதனா வைத்தியசாலை மேற்கொண்டிருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் இத்தகைய சிரமங்களை நோயாளர்களுக்கு வழங்காதிருப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வைத்தியசாலை கவனமெடுக்க வேண்டும் என்பது கிளினிக் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகைதரும் வெளிநோயாளர்கள் வைத்தியர்களால் பார்வையிடப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.