;
Athirady Tamil News

வெளிநாட்டிற்காக தரவுகளை கசியவிட்ட இரு உயிரியல் விஞ்ஞானிகள்: கனடா அதிரடி

0

சீனாவுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு தொற்று நோய் ஆய்வகத்தில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகளை கனடா பணிநீக்கம் செய்துள்ளது.

பாதுகாப்பிற்கு யதார்த்தமான அச்சுறுத்தல்
வெளியேற்றப்பட்ட அந்த கணவன் மற்றும் மனைவி விஞ்ஞானிகள் கனடாவின் பொருளாதார பாதுகாப்பிற்கு யதார்த்தமான மற்றும் நம்பகமான அச்சுறுத்தல் என்று அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.

விஞ்ஞானிகள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பின்னால் உள்ள தகவல்களைக் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் வெளியிட்ட ஏராளமான ஆவணங்களை மேற்கோள் காட்டி குறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

2021ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சர் மார்க் ஹாலண்ட் தெரிவிக்கையில், அந்த நேரத்தில் ஆய்வகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆனால், தேசிய பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவுடன் தகவல்கள் மற்றும் ஆவணங்கள்
வின்னிபெக் பகுதியில் அமைந்துள்ள அந்த ஆய்வகத்தில் இருந்து கடந்த 2019ல் Xiangguo Qiu மற்றும் அவரது கணவர் Keding Cheng ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

அவர்கள் 2021ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2019ல் பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்திருந்தனர். ஆனால் புதன்கிழமை தான் அதன் பின்னணி வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் தகவல்கள் மற்றும் ஆவணங்களை அவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக் ஆய்வகத்தின் பணி என்பது எபோலா போன்ற மிகவும் ஆபத்தான மனித மற்றும் விலங்கு நோய்க்கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சியை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.