;
Athirady Tamil News

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

0

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

“ஏ” தர ஆதார வைத்தியசாலை
யாழ் மாவட்டத்தில் காணப்படும் நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது “ஏ” தர ஆதார வைத்தியசாலையாக காணப்படுகின்றது.

ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர மற்றும் திடீர் விபத்து பிரிவின் ஊடாக பலர் நன்மையடைய உள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்ததன் பின்னர் அதிபர் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டனர்.

மக்களுக்கான வரப்பிரசாதம்
இந்த வைத்தியசாலையின் ஊடாக அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதன்போது தெரிவித்தார்.

குறிப்பாக புதிய சிகிச்சை பிரிவில் CT ஸ்கான் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது இப்பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகவே மத்திய அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கொள்கையை அனைத்து மக்களிடையேயும் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என இதன்போது ஆளுநர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.