;
Athirady Tamil News

கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொட‌ர்ந்தும் அநீதி -அர‌சாங்க‌ம் பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ முன் வ‌ர‌வேண்டும்

0

கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொட‌ர்ந்தும் அநீதி இழைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருப்ப‌தை அர‌சாங்க‌ம் க‌வ‌ன‌த்தில் எடுத்து அம்ம‌க்களின் பிர‌ச்சினைக‌ளை தீர்க்க‌ முன் வ‌ர‌வேண்டும் என‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் லாங்கிர‌ஸ் கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி விடுத்துள்ள‌ அறிக்கையில் தெரிவித்திருப்ப‌தாவ‌து, யுத்தம் முடிவடைந்து மக்கள் சுதந்திரமாக வாழும் இன்றைய நிலையில் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேசத்தில் வாழும் மக்கள் மட்டும் சுதந்திரமாக வாழ முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் மொத்தம் 2631.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது.
இம்மாவட்டத்தில்
14-பிரதேச செயலகப் பிரிவுகள் இருக்கின்றன.
சரியாகப் பிரித்தால்கூட ஒரு செயலகப் பிரிவுக்கு குறைந்தது 188.08. ச.கி.மீ. காணி இருக்க வேண்டும்.
ஆனால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கு வெறும் 18-ச.கி.மீ. நிலம் மாத்திரமே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எனினும் கிரான் மற்றும் வாழைச்சேனை மத்தி செயலகங்கள் உருவாக முன்னர் 176.6 ச.கி.மீ. நிலத்தை ஓட்டமாவடி செயலகம் கொண்டிருந்தது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கு சொந்தமான இந்த 176.6 ச.கி.மீ நிலப்பரப்பில் கள்ளிச்சை 210A,
புணாணை மேற்கு 210E,
வாகனேரி 210,
வடமுனை 210A/1,
ஊத்துச்சேனை 210A/2
ஆகிய 5-கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய 158-ச.கி.மீ. நிலப்பரப்பு பயங்கரவாதப் புலிகளின் கெடுபிடிகள், மரண அச்சுறுத்தல்கள் அதிகரித்திருந்த பகுதியாக அவை இருந்தமையினால் அங்கு தொடர்ந்து குடியிருக்கவோ, விவசாயம் செய்யவோ இப்பிரதேச மக்களுக்கு முடியவில்லை.

இதனால் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கு சொந்தமாக இருந்த 176.6 ச.கி.மீ. நிலம். வெறுமனே 18- ச.கி.மீ. ஆக சுருக்கப்பட்டு ஒரு மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்குப்பட்டே இப்பிரதேச மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்நிலையில் 2002-ம் ஆண்டு கிரான் பிரதேச செயலகப் பிரிவு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட போது ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குச் சொந்தமாக இருந்த மேற்குறிப்பிட்ட
கள்ளிச்சை,
வாகனேரி,
புணானை மேற்கு,
வடமுனை,
ஊத்துச்சேனை
ஆகிய 5-கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட 158-ச.கி.மீ. ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் வாழ்கின்ற மக்களின் கருத்துக்களை அறியாமல் கிரான் செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இத்த‌னைக்கும் அப்போது ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அர‌சுக்கு முட்டுக்கொடுத்து ஆட்சியில் அமைச்ச‌ராக‌ இருந்த‌ கால‌ம். ஆனாலும் இந்த‌ அநியாய‌த்தை த‌டுக்க‌ வ‌க்கில்லாத‌ க‌ட்சியாக‌ அது இருந்த‌து.

இந்த‌ அநீதி காரண‌மாக‌ 176.6 ச.கி.மீ. ஆக இருந்த நிலப்பரப்பானது வெறும் 18- ச.கி.மீ. ஆக குறைக்கப்பட்டு பாரிய‌ அநீதி இழைக்கப்பட்டது.

இச்செயற்பாடானது “பன்னம்பலன” ஆணைக்குழுவினால் இம்மக்களுக்கு செய்த அநீதியாகும்.

அதேவேளை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகப் பிரிவானது ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாகத்தினுள் இருந்த தியாவட்டவான் கிராம அலுவலர் பிரிவை மாத்திரம் பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.

நிலத்தொடர்புள்ள வாகரை பிரதேசத்திலிருந்து ஒரு கிராம அலுவலர் பிரிவுகூட பிரிக்கப்பட்டு வாழைச்சேனை கோ.ப. மத்தியுடன் இணைக்கப்பவில்லை.

ஆனால் ஓட்டமாடியிலிருந்து 5-கிராம அலுவலர் பிரிவுகள் கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது
சுட்டிக்காட்டத்தக்கது.

யுத்தம் முடிந்ததும் தமது வயல் நிலங்களுக்குச் சென்ற இப்பிரதேச மக்கள் தமது வயல் நிலங்களின் நிர்வாகச் செயற்பாடுகள் 25-கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் கிரான் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர்.

2002-ல் கிரானுடன் இணைக்கப்பட்ட மேற்படி 5-கிராம அலுவலர் பிரிவுகளிலும் இருக்கும் வயல் நிலங்களில் 90% வீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கோ.ப. மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்களுக்குச் சொந்தமானதாகும்.

கிரான் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கு போதிய நிலம் அங்கு காணப்பட்டபோதும் இவ் ஐந்து நிலப்பரப்பு பிரிவுகளும் அப்போதிருந்த தமிழ் தரப்பினரால் கபளீகரம் செய்யப்பட்டது கூட‌ தெரியாத‌ முட்டாள்க‌ளாக‌ அன்றைய‌ முஸ்லிம் அர‌சிய‌ல் அதிகார‌ங்க‌ள் இருந்த‌ன‌.

அப்போது மட்டக்கப்பு கச்சேரியில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த வை. அஹமட் மற்றும் ஓட்டமாவடி உதவி அரசாங்க அதிபர் ஏ.கே.உதுமான் அவர்களும் பாஸிஸப் புலிப் பயங்கரவாதிகளால் நன்கு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 9000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 34,000 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு இருக்கும் நிலப்பரப்பு ஆக 18-ச.கி.மீ. ஆகும். அதிலும் 4-ச.கி.மீ மாத்திரமே குடியிருப்புக் காணியாகும்.

எனவே 34,000 பேர் 4 ச.கி.மீ. நிலப்பரப்பினுள் வசித்துவரும் அதேவேளை கிரான் செயலகப் பிரிவில் அதே அளவு குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் (8593 குடும்பங்கள் 32000 பேர்) 686 ச.கி.மீ. நிலப்பரப்பினுள் வாழ்கின்றனர்.

ஆக, ஒருபுறம் 32,000 பேர் 686 ச.கி.மீ. நிலப்பரப்பில் வசிக்க, அதேநேரம் 34,000 பேர் 4 ச.கி.மீ. நிலப்பரப்பில் வசிக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சனத்தொகை நெரிசல் காரணமாக மக்கள் சுகாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் பரிதாப நிலை ஓட்டமாவடி பிரதேச மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நாளாந்த வீட்டுக் கழிவுகளை அகற்றுதல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம்: கோறளைப்பற்று மேற்கு ஓட்டமவடி பிரதேச செயலகத்திற்கென ஒரு பிரதேச சபை இருக்கின்றது. இந்த ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குள்தான் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிலிருந்து கிரானுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றது.

அந்த 5 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 3 வட்டாரங்களையும் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களும் ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்களாக தமது கடமைகளை செய்துவருவதுடன் அவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவும் இங்கு இருந்த‌மை குறிப்பிடத்தக்கது.

ஆக, இங்கு பிரதேச செயலகத்திற்கு ஒரு எல்லையும் பிரதேச சபைக்கு வேறொரு எல்லையும் அறிமுகப்படுத்தப்பட்டு முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை மேற்குறிப்பிட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகளினதும் நிருவாக நடவடிக்கையினை ஓட்டமாவடி பிரதேச சபையே மேற்கொண்டு வருகின்றது.

ஒரு பிரதேச சபைக்குரிய எல்லைகளாக அமைந்திருக்கும் நிலப்பரப்பு அதே பிரதேச செயலகத்திற்கு இல்லாமலிருப்பது இலங்கையில் வேறு எங்கும் இல்லாத, இங்கு மாத்திரம் இருக்கும் ஒரு விசித்திரமான நிருவாக ஒழுங்கமைப்பாகும்.
முஸ்லிம் காங்கிர‌சுக்கு பின் வ‌ந்த‌ அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ல்ம்குடா ம‌க்க‌ளின் அதிகார‌த்தை பெற்றிருந்தும் அக்க‌ட்சியின‌ரும் கூட‌ ம‌க்க‌ளின் இந்த‌ அவ‌ல‌த்தை தீர்க்க‌ முன்வ‌ராம‌ல் ச‌மூக‌த்தை ஏமாற்றின‌ர்.

எனவே கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடியில் இருந்து பலவந்தமாக பிரித்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகளையும் மீண்டும் இச்செயலகப் பிரிவுடன் இணைக்கப்படல் வேண்டும் என கல்குடா தொகுதி வாழ் முஸ்லிம்கள் சார்பாக‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் உரிமைக் கோரிக்கையாக முன்வைக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.