;
Athirady Tamil News

இராணுவ உளவு செயற்கைக்கோள் பரிசோதனையில் வெற்றியடைந்த தென்கொரியா

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரண்டாவது இராணுவ உளவு செயற்கைக்கோளை தென்கொரியா ஏவி பரிசோதனை செய்ததில் வெற்றியடைந்துள்ளது.

குறித்த பரிசோதனையானது தென்கொரிய நேரப்படி இன்று(08) காலை இடம்பெற்றுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்த வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான பகைமைகள் உச்சம் தொட்டுள்ள சூழலில் இன்று தென்கொரியா இந்த பரிசோதனையை நடத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம்
இதனை தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளதுடன் உளவு செயற்கைக்கோள் வட்டபாதைக்குள் நுழைந்ததோடு ராக்கெட்டில் இருந்து பிரிந்த பின்னர் தரைப்பகுதியில் அமைந்த கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியோன் ஹா கியூ(Jeon Ha Kyu) ஊடகங்களில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த செயற்கைக்கோள் பரிசோதனை வெற்றியால் எங்களுடைய இராணுவத்திற்கு கூடுதலாக ஒரு தற்சார்பு கண்காணிப்பு திறன் கிடைத்துள்ளது.

தாக்குதல் திறன்
எங்களுடைய தாக்குதல் திறனையும் இன்னும் கூடுதலாக வலுப்படுத்தி உள்ளதுடன் 2025 ஆம் ஆண்டுக்குள் ஐந்து உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப தென்கொரியா திட்டமிட்டு உள்ளது.

இதற்காக ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தி உள்ளதுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை பயன்படுத்தி செயற்கைக்கோள் ஒன்றை ஏவி பரிசோதித்து அதனை வட்டபாதையில் நிறுத்தி வெற்றி பெற்றது.

இதனால் இந்த பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற உலகின் பத்தாவது நாடாக தென்கொரியா உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 15 ஆம் திகதி வடகொரிய நிறுவனரான கிம் 2 சங்கின்(Kim Il Sung) பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த உளவு செயற்கைக்கோளை வடகொரியா விரைவில் ஏவ கூடும் என தென்கொரிய பாதுகாப்பு மந்திரி ஷின் ஒன்சிக்(Shin Won-sik) இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.