;
Athirady Tamil News

ஈரானின் எதிர்பாராத தாக்குதல்… இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா: விளக்கமளித்த வெள்ளைமாளிகை

0

மத்திய கிழக்கில் நெருக்கடி அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு அமெரிக்கா தயாரில்லை
ஈரானில் இருந்து தொடுக்கப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்த நிலையிலேயே வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் ஒரு போருக்கு அமெரிக்கா தயாரில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

ஈரானின் எதிர்பாராத திடீர் தாக்குதல் போருக்கான அச்சத்தைத் தூண்டியதை அடுத்து, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது.

ஏப்ரல் 1ம் திகதி டமாஸ்கஸ் நகரில் ஈரானின் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையிலேயே ஈரான் பதிலுக்கு தாக்கியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பாதுகாப்பையும் ஆதரவையும் உறுதி செய்துள்ள அமெரிக்கா, ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடிக்கு ஆதரவில்லை என அறிவித்துள்ளது.

தமக்கு உடன்பாடில்லை
ஈரான் மீது பதில் தாக்குதல் முன்னெடுப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க ராணுவத்தினர் மீது ஈரான் தாக்குதல் முன்னெடுக்கிறதா என்பதை கண்காணித்து வருவதாக ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு இஸ்ரேலை நோக்கி 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியது.

இதில் 12 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரானின் எதிர்பாராத தாக்குதலை அமெரிக்கா, பிரித்தானியா, ஜோர்தான் உள்ளிட்ட கூட்டணி நாடுகளுடன் இணைந்து முறியடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.