மஹியங்கனையில் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

மஹியங்கனை (Mahianganai), ரம்புக்யாய பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று (17.04.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடைய மஹியங்கனை, பதியத்தலாவ வீதி 47, கட்டையில் வசிக்கும் நபர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை பொதி செய்து மஹியங்கனை பகுதியில் உள்ள உள் வீதிகளில் சென்று விற்பனை செய்வதாக மஹியங்கனை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள், ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட 74 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மஹியங்கனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.