;
Athirady Tamil News

102 தொகுதிகள்.. 1625 வேட்பாளர்கள்.. நாளை வாக்குப்பதிவின் முக்கிய தகவல்கள்!

0

இந்தியாவில் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதே போன்று, வடகிழக்கு மாநிலங்களில் தலா 2 தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவிலும்,

தலா ஒரு தொகுதியை உடைய மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களிலும், லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மேலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், அசாம், பிகார், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதாவது 25 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 12 இடங்களுக்கும்,80 தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 8 இடங்களுக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் 4 இடங்களுக்கும்,

மத்திய பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 6 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ராவில் 5 இடங்களுக்கும், 42 தொகுதிகளை உள்ளட்டக்கிய மேற்குவங்கத்தில் 3 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் 14 மக்களவைத் தொகுதிகளில் ஐந்திலும், 2 இடங்கள் கொண்ட மணிப்பூரில் ஒரு தொகுதியிலும் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

11 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் ஒரு இடத்திற்கும், 5 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும், 2 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஆக, ஒட்டுமொத்தமாக 102 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில், 8 சதவிகிதம் பேர், அதாவது 134 வேட்பாளர்கள் பெண்கள்.

மேலும், முதற்கட்டத் தேர்தலில், 8 மத்திய அமைச்சர்கள், 4 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர் ஒருவரின் அரசியல் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன், தென்சென்னையில் தொகுதியில் களம் காண்கிறார்.

மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், நீலகிரி தொகுதியில் திமுக எம்.பி.ஆ.ராசாவை எதிர்த்து களம் காண்கிறார்.இதே போன்று, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான சர்பானந்த சோனோவால் போட்டியிடும் அசாம் மாநிலம் திப்ரூகர் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை எதிர்த்து அம்மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான நபம் துகி களம் காண்கிறார்.மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி 3 ஆவது முறையாக மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் போட்டியிடும் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதே போன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் தொகுதியில் களம் காணும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்திர யாதவை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் யாதவ் போட்டியிடுகிறார்.

மத்திய கால்நடைத்துறை இணை அமைச்சரான சஞ்சீவ் பல்யான், உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் களம் காண்கிறார்.பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணை அமைச்சரான ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் போட்டியிடுகிறார்.

திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், பாஜக சார்பில் போட்டியிடும் திரிபுரா தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.சட்டப்பேரவை தேர்தலை பொருத்தவரை 60 தொகுதிகள் கொண்ட அருணாச்சலப் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் கொண்ட சிக்கிமிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.