;
Athirady Tamil News

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது…!

0

இலங்கையில் இருவேறு கடற்பரப்புக்களில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையினரால் நேற்றைய தினம் (17) திருகோணமலை மற்றும் கிளிநொச்சி கடைக்காடு ஆகிய கடற்பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிறிலங்கா கடற்படையினர் அடிக்கடி ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம், அந்தவகையில் நேற்றும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அனுமதியற்ற வலைகள்
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை அதிகாரிகளால், ரவுண்ட் தீவின் கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அனுமதியற்ற கடற்தொழில் வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டது மாத்திரமல்லாமல், இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட வெத்தலகேணி கடற்படையினர், கடைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​இலகுரக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒருவரை (01) கைதுசெய்துள்ளனர், இதன்போது சந்தேகநபர் பயன்படுத்திய படகு (01) ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்ட நடவடிக்கை
இந்த சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா மற்றும் முள்ளியன் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என 21 வயது முதல் 54 வயது வரையிலானவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரவுண்ட் தீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 11 பேரும் சட்ட நடவடிக்கைகளுக்காக கோட் பே கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், படகு மற்றும் அங்கீகரிக்கப்படாத கடற்தொழில் சாதனங்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

தவிரவும், கடைக்காடு கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் கடற்தொழில் உபகரணங்களுடன் குறித்த சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.