;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்த நபர்கள் : அம்பலமான தகவல்

0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் என்பவரது வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆகவே இவர்கள் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்திருந்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வாக்குமூலம் வழங்கலாம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் ஆட்சியிலும் முன் கொண்டு செல்லப்பட்டது.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்து வாக்குமூலம் வழங்கலாம். பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் சிறையில் உள்ள நௌபர் மௌலவி பிரதான சூத்திரதாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மூன்று விசாரணைகளில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 23 ஆயிரம் குற்றச்சாட்டுக்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவ்விவகாரத்தில் அரசாங்கத் தரப்பில் எவ்வித தாமதமும் கிடையாது. நீதிமன்ற கட்டமைப்பிலேயே தாமதம் காணப்படுகிறது ஆகவே விசாரணைகளுக்கு விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமது அரசாங்கத்தில் நீதியை பெற்றுக்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் கத்தோலிக்க சபையிடம் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாகவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் என்பவரின் இரு புதல்வர்கள் தற்கொலைதாரிகளாக மாறி குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

உண்மையான சூத்திரதாரிகள்
அதேபோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். ஆகவே இவர்கள் உண்மையான சூத்திரதாரியை நன்கு அறிந்திருந்தார்கள்.

எனவே மக்கள் விடுதலை முன்னணியினர் இப்ராஹிமிடம் இவ்விடயம் தொடர்பில் வினவ வேண்டும்.

இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சியிர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்திருந்தும் அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அப்போதைய அரசாங்கம் எடுக்கவில்லை. முஸ்லிம் வாக்குகளுக்காக இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை அலட்சியப்படுத்தியது.

இதன் விளைவாகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் உண்மையான முஸ்லிம்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.