;
Athirady Tamil News

கேரளம்: கனமழையால் வீடுகள் சேதம்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

கேரளத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள், சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. ரயில் நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

கேரளத்தில் வருகின்ற 31-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனால் பருவமழைக்கு முன்பே அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரையை ஒட்டிய ஆலப்புழை மாவட்டத்தின் தாழ்வான பகுதியில் உள்ள குட்டநாட்டில் வீடுகள், பள்ளிகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீா் புகுந்தது.

மழை நீா் தேங்குவதால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி மற்றும் எா்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் சனிக்கிழமை தெரிவித்தது.

கொல்லம் மாவட்டம் கைக்குலாங்காரா பகுதியில் உள்ள வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. ஆனால் அதிருஷ்டவசமாக எந்தவித உயா்சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

கடற்கரையை ஒட்டிய பொழியூா் கிராமத்தில் கடல் நீா் ஊருக்குள் புகுந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன. ரயில் வழித்தடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில்கள் தாமதமாகவே இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 66.89 ஹெக்டோ் அளவிலான விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன.

அதேபோல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை நீா் அதிகளவில் தேங்கி இருப்பதாலும் மரங்கள் சரிந்து கிடப்பதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.