கனேடியரைக் கொன்ற துருவக் கரடிகள்: ஒரு அசாதாரண நிகழ்வு
கனடாவில் ஒரு அசாதாரண நிகழ்வாக, கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
துருவக்கரடிகளால் கொல்லப்பட்ட நபர்
கனடாவுக்கு சொந்தமான Brevoort தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Brevoort தீவில், நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ, விமானங்களோ அத்துமீறி நுழைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரைத்தான் இரண்டு துருவக்கரடிகள் கொன்றுவிட்டன. விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற ஊழியர்கள், அந்தக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள்.
துருவக்கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை. ஆனால், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்படி மனிதர்கள் மீது துருவக்கரடிகள் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஆண்டு, அலாஸ்காவிலுள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண்ணையும் அவரது ஒரு வயதுடைய மகனையும் ஒரு துருவக்கரடி கொன்றுவிட்டது.
புவி வெப்பமயமாதலால் கடலில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால், துருவக்கரடிகளுக்கு வேட்டையாடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குமான இடம் குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.