;
Athirady Tamil News

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம்

0

உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (13.02.2025) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டுகை அமைச்சின் செயலர் திருமதி மலர்மதி கெங்காதரன் தனது ஆரம்ப உரையில்,
முன்னைய காலங்களில் வீட்டில் வறுமை என்பதைச் சொல்வதற்கே எமது சமூகத்தின் மத்தியில் வெட்கம் இருந்தது. ஆனால் இன்று வசதியுள்ளவர்களும் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவை என்று சொல்லும் நிலைமைதான் காணப்படுகின்றது. தங்கிவாழ்வோர் எண்ணிக்கையை தொடர்ச்சியாக இதே மட்டத்தில் பேண முடியாது. நலன்புரி நன்மைகள் ஊடாக ஒவ்வொருவரும் வலுவூட்டப்படவேண்டும். நிலைபேறான தன்மையை உருவாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில்,
வறுமை ஒழிப்புக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. உதவிகளைப் பெற்றுக்கொள்வோர் அதனைத் தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்குத்தான் விரும்புகின்றனரே தவிர, பெற்றுக்கொண்ட உதவிகளைப் பயன்படுத்தி தங்களை வலுவூட்டவில்லை. இவ்வாறான திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை, என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் என்பனவற்றின் முன்னேற்றம் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டது.
எத்தனை பாடசாலைகளில், எவ்வளவு மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகின்றது?, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

சந்தையில் விவசாயப் பொருட்களின் விலை அதிகரிக்கும் காலங்களில் பாடசாலைகளுக்கு குறைந்த விலையில் மரக்கறிகளை இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் வழங்கப் பின்னடிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதேபோன்று முட்டையின் விலையிலும் இவ்வாறான நிலைமை காணப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு ஆராயப்பட்டது.

அதற்கான மாற்றுப்பொறிமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதேநேரம் காலநிலைப் பாதிப்பால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளமையால், பாடசாலைகளுக்கு மரக்கறிகள் வழங்கப்படுவதிலுள்ள சிக்கல் நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றறிக்கைக்கு அமைவாக அசைவ உணவுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட நிலையிலும் சில பாடசாலைகளில் அது பின்பற்றப்படாமை தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்தோடு உதவித்திட்டத்தின் நோக்கத்துக்கு முரணாக செயற்படும் பயனாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககுமாறு ஆளுனர் வலியுறுத்தினார். மேலும்
பயனாளிகள் தெரிவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது என்றும் குறிப்பிட்ட ஆளுநர், தொடர்புடைய திணைக்களங்கள் நேரடியாக கள ஆய்வுகளை கூட்டாக மேற்கொண்டு பயனாளிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு வழங்கும் இந்தத் திட்டத்தால் கிடைக்கப்பெற்ற அடைவுமட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),திருமதி. நளாஜினி இன்பராஜ்,திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன்,வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி, கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக்டிறஞ்சன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள், வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.