மகா சிவராத்திரி கொண்டாட காட்டுக்குள் சென்ற 3 பக்தர்கள் யானைகள் தாக்கி உயிரிழப்பு

ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர மாநிலத்தின் அன்னமைய்யா மாவட்டம், வை.கோட்டா கிராமத்தை சேர்ந்த சுமார் 15 பக்தர்கள், அருகே குண்டாலகோனா வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நேற்று காலை நடந்து சென்றனர். இவர்களில் ஒருவர் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் மூடியை தட்டிக்கொண்டே சென்றதாக தெரிகிறது. இந்த சத்தம் கேட்ட காட்டு யானைகள் கூட்டம், திடீரென இவர்களை சுற்றி வளைத்து ஆக்ரோஷமாக தாக்கத் தொடங்கின.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பக்தர்கள் அங்கிருந்த தப்பியோட முயன்றனர். எனினும் யானைகள் தாக்கியதில் தினேஷ், மணியம்மா, செங்கலராயுடு ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரும் ரயில்வே கோடூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு இவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரூ.10 லட்சம் நிதியுதவி: இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என வனத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.