;
Athirady Tamil News

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் கைது

0

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தேக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து, அவர் அந்நாட்டு காவல் துறையினரால் இன்று (மார்ச் 11) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹாங்காங் நாட்டிலிருந்து வந்த முன்னாள் அதிபரை தலைநகர் மனிலா விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரது ஆட்சிக்காலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது கைதானது ‘வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு’ என மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யார் இந்த ரொட்ரிகோ துதெர்த்தே?
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பின்ஸின் டாவோ மாகாணத்தின் ஆளுநராக சுமார் 22 ஆண்டுகள் பதவி வகித்த ரொட்ரிகோ துதெர்த்தே, அவரது ஆட்சியின் கீழ் தெரு குற்றங்களிலிருந்து பாதுகாப்பான நகரமாக டாவோ மாகாணத்தை உருவாக்கினார். குற்றங்களுக்கு எதிரான இவரது அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த அவர், கடந்த 2016 ஆம் நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரானார்.

பின்னர், 2022 ஆம் ஆண்டு வரையிலான அவரது ஆட்சிக்காலத்தில் அது வரை அந்நாட்டில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அவர் துவங்கிய போரின் மூலம் அந்த குற்றமானது வெகுவாகக் குறைந்தது.

இருப்பினும், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அவர் பிறப்பித்த கடுமையான உத்தரவுகளினால் அந்த குற்றத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்ட சுமார் 6000 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினராலும் அடையாளம் தெரியாத மர்ம கும்பல்களினாலும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இவரது இந்த கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான அதிபர் ரொட்ரிகோவின் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் நகரத்தில் வாழும் ஏழை ஆண்கள் என்றும் அந்நாட்டு காவல் துறையினர் எந்தவொரு வாரண்ட்டுகளின் தேவையுமின்றி குற்றம்சாட்டப்படுபவர்களின் வீடுகளில் சோதனையிட்டு அவர்களை கைது செய்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலமாக போதைப் பொருள் கடத்தலின் முக்கியத் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெருக்களில் அந்த வேலைகளில் ஈடுபட்டவர்களே பெரும்பாலும் தண்டிக்கப்பட்டார்கள் என அதிபரின் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் குறித்து பிலிப்பைன்ஸ் மக்களவையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் விவகாரத்தில் சந்தேகிக்கப்படுபவர்களைக் கொலை செய்ய நிழல் உலக கொலைக்கார கும்பல் ஒன்று செயல்பட்டதாகவும் அவர்கள் கொல்லும் நபருக்கு நிகரான சன்மானம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அதிபர் ரொட்ரிகோ மீது பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை முற்றிலும் மறுத்த அவர், தனது கொள்களைகள் மற்றும் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்காதீர்கள் எனவும் தான் செய்யும் அனைத்தும் பிலிப்பினோ மக்களுக்காக தான் எனக் கூறினார்.

இந்த விவகாரத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி.) குறிப்பிட்டு காட்டியிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு அதன் விசாரணையை துவங்கியது. இந்த வழக்கில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரையிலான காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதுவரை ஐ.சி.சியின் உறுப்பினர் நாடாகயிருந்த பிலிப்பின்ஸ் அதிலிருந்து வெளியேறியது.

‘கிழக்கின் டொனால்ட் டிரம்ப்’
கிழக்கு திசை நாடுகளின் டொனால்ட் டிரம்ப் என்று வர்ணிக்கப்படும் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தே, அந்நாட்டின் தெற்கு மனிலாவைச் சேர்ந்த மிண்டானாவோ பகுதியிலிருந்து வந்த முதல் அதிபர் ஆவார். பெரும்பாலும், அப்பகுதி மக்கள் அந்நாட்டின் முக்கிய தலைவர்களால் ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வந்த அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தேவிற்கு மக்கள் ஆதரவு பெருமளவில் உண்டானது. கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் பதவி விலகியபோது அந்நாட்டின் 10 ல் 9 பேர் அவரது ஆட்சியை நல்லாட்சியாகக் கருதியதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் அந்நாட்டின் மற்றொரு அரசியல் குடும்பமான மார்கோஸ் குடும்பத்துடன் துதெர்த்தே குடும்பம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன் மூலம் மார்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃபெர்டினாண்டு மார்கோஸ் ஜூனியர் பிலிப்பின்ஸின் அதிபரானார். மேலும், ரொட்ரிகோ துதெர்த்தேவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவரது மகள் சாரா துதெர்த்தே அந்நாட்டின் துணை அதிபரானார். பின்னர், ரொட்ரிகோ துதெர்த்தே மீதான ஐ.சி.சியின் விசாரணைக்கு அதிபர் மார்கோஸ் ஒத்துழைக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இரு குடும்பங்களுக்கு இடையிலான உறவில் விரிசலடைந்து வந்த நிலையில் ஐ.சி.சியின் விசாரணைக்கு பிலிப்பின்ஸ் உடன்படும் என அதிபர் மார்கோஸ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ரொட்ரிகோ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் ரொட்ரிகோ நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவாரா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.