கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்?

கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய கண்டத்தின் ஓர் அங்கமான கிரீன்லாந்து தீவு, டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமாக திகழ்கிறது.
பரபரப்பான அரசியல் சுழலில் சிக்கியுள்ள கிரீன்லாந்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) தோ்தல் நடைபெறவிருக்கிறது. பனிப் பிரதேசமான கிரீன்லாந்தின் மொத்த மக்கள்தொகை 57,000 மட்டுமே. அவர்களில் 40,500 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.
இனாட்சிசார்டுட் என்றழைக்கப்படும் கிரீன்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 31 இடங்களில் 16 இடங்களை ஒரு கட்சி கைப்பற்றியாக வேண்டும்.
சர்வதேச அரசியல் சுழலில் கிரீன்லாந்து:
தாது வளம் நிறைந்த அந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்ளவிருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருவதுதான் கிரீன்லாந்து தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க தேசியத்தின் பாதுகாப்புக்காக ஆர்க்டிக் பிராந்தியமான கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்வது முக்கியத்துவம் பெறுவதாக டிரம்ப் சொல்லி வருகிறார். அந்த வகையில், “கிரீன்லாந்து (பனாமா கால்வாய்ப் பகுதியை) தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ராணுவ நடவடிக்கையோ அல்லது பொருளாதார நடவடிக்கையோ எடுக்கத் தயங்கமாட்டோம். அமெரிக்காவின் பொருளாதாரப் பாதுகாப்புக்காக, மேற்கண்ட பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம்” என்று பொருள்பட அவர் பேசியுள்ளார்.
இந்த நிலையில், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல! கிரீன்லாந்து மக்களுக்கே கிரீன்லாந்து சொந்தம்” என்று அந்நாட்டின் பிரதமர் ம்யூட் எகேடே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்செனும் மேற்கண்ட கருத்தை வழிமொழிந்துள்ளார். “கிரீன்லாந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான இந்த அரசியல் சூழலில், கிரீன்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான வாக்காளர்கள் டென்மார்க்கிடமிருந்து பிரிந்து சுதந்திர தேசமாக தாங்கள் திகழ வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
அதுமட்டுமல்லாது, சற்றே ஆச்சரியமளிக்கும் விதமாக, வாக்காளர்கள் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறிய முடிகிறது. டொனால்ட் டிரம்ப்புடன் இணக்கமாக இணைந்து பணியற்றினால் தங்கள் பகுதிக்கு சர்வதேச அச்சுறுத்தல்களிலிருந்து உரிய பாதுகாப்பும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் ஏற்படுமென்று இப்போது எண்ணுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்!