பஹல்காம் தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்று உயிர் துறந்த குதிரை சவாரி தொழிலாளி!

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் குதிரை சவாரி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் சையது அடில் உசேன் ஷா. சுற்றுலாப் பயணிகளை குதிரை மூலம் சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்வது இவரது வழக்கம்.
இந்த நிலையில், திடீரென நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலை அறிந்த உசேன் ஷா, தான் அழைத்து வந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து தீவிரவாதி ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றார். ஆனால், அவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தன்னை நம்பி வந்த சுற்றுலா பயணிகளை தன்னுயிரை ஈந்து காப்பாற்ற முயன்ற சையதுவை பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். உசேன் ஷாவின் வருமானத்தை நம்பி மட்டுமே அவரது வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் இருந்தனர். தற்போது உசேன் ஷா இறந்துவிட்டதால் அவரது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து உசேன் ஷா தந்தையான சையது ஹைதர் ஷா கூறுகையில், “இந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு மகனுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. பின்னர் காவல் நிலையத்துக்கு சென்றபோதுதான் அவன் இந்த தாக்குலில் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.