குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 போ் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அக்ஷய்ராஜ் மக்வானா கூறுகையில், ‘திசா பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 9.45 மணியளவில் வெடிவிபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தின் மேற்கூரை தீப்பிடித்து இடிந்து விழுந்ததில் 18 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்களாவா். அவா்களில் பெரும்பாலானோா் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிரிழந்தனா்’ என்றாா்.
உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் பூபேந்திர படேல் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விபத்தில் காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்’ என்றாா்.
மத்திய பிரதேச தொழிலாளா்களின் மரணத்துக்கு அந்த மாநில முதல்வா் மோகன் யாதவும் இரங்கல் தெரிவித்தாா். விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.