தலையில் கேமரா அணிந்திருந்த தீவிரவாதிகள்: இன்ஜினீயரின் மனைவி தகவல்

கடந்த 22-ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த இன்ஜினீயர் பிதன் அதிகாரியும் (40) ஒருவர். அவரது மனைவி சோகினி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு தீவிரவாதி எங்களை வழிமறித்தார். அவரது தலைமையில் கேமரா அணிந்திருந்தார்.
எனது கணவர் பிதன் அதிகாரியிடம் உங்கள் மதம் என்ன என்று கேட்டார். எனது கணவர் மவுனமாக இருந்தார். அப்போது கல்மாவை கூறும்படி தீவிரவாதி மிரட்டினார். எனது கணவர் தெரியாது என்று பதிலளித்தார். உடனே அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டார். இதில் எனது கணவர் அதே இடத்தில் உயிரிழந்தார். தீவிரவாதி எங்களோடு உரையாடியது, துப்பாக்கியால் சுட்டது அனைத்தும் கேமராவில் பதிவாகி யாரோ ஒருவருக்கு அனுப்பப்பட்டது என்று கருதுகிறேன். இவ்வாறு சோகினி தெரிவித்தார்.
மும்பை எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் சைலேஷ் என்பவரும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது 10 வயது மகன் நாஸ் கூறும்போது, “நாங்கள் குடும்பமாக பஹல்காம் சென்றது. எங்களுக்கு பசியாக இருந்தது. அங்குள்ள நடைபாதை கடையில் நாங்கள் சாப்பிட சென்றோம். அப்போது திடீரென தீவிரவாதிகள் வந்து எனது தந்தை உட்பட பலரை சுட்டுக் கொன்றனர். அந்த தீவிரவாதிகள் அனைவரும் தலையில் கேமராக்களை அணிந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
.
ஹமாஸ் பின்னணி: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது ஹமாஸ் தீவிரவாதிகள் தலையில் கேமரா அணிந்து, தீவிரவாத தாக்குதலை சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்தனர். பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகளும் ஹமாஸ் தீவிரவாதிகளை போன்று தலையில் கேமரா அணிந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரீவன் கூறியதாவது: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ரகசியமாக சென்றுள்ளனர். அங்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் சந்தித்து பேசி உள்ளனர். தற்போது காஷ்மீரின் பஹல்காமில் ஹமாஸ் பாணியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேல் தூதர் ரீவன் தெரிவித்துள்ளார்.