;
Athirady Tamil News

கிளிநொச்சி பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சிக்கு வழங்கி கடைக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்க ஆளுநர் தீர்மானம்

0

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சி மன்றத்துக்கு கையளிப்பதற்கும், உள்ளூராட்சி மன்றத்தால் அங்கு கடைத்தொகுதி அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு அதனை முன்னுரிமையில் வழங்குவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (08.05.2025) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர்புடைய தரப்புக்களுடன் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், மேற்படி பேருந்து நிலையத்தின் காணியின் உரிமையை யாருக்கு வழங்குவது மற்றும் அந்தக் காணியை எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தக் காணியை வௌ;வேறு தரப்புக்கள் ஆக்கிரமித்து காணியின் அளவு குறைவடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். மேலும் எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமையால் அங்கு சட்டவிரோதச் செயல்களும் நடைபெறுகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இங்கும் ஏற்படக் கூடாது எனக் குறிப்பிட்டார். கிளிநொச்சி நகரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றமையை கவனத்திலெடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றார்.

வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர் பி.ஜெயராஜ், வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில்தான் உள்ளன. இந்தப் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு மாத்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை முன்னெடுப்பது எமக்குப் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. அதனை உள்ளூராட்சி மன்றத்துக்கு வழங்க எங்களுடைய முகாமைத்துவ சபையும் அனுமதி வழங்கியுள்ளது, என்று குறிப்பிட்டார்.

கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர், பேருந்து நிலையத்தின் காணியை பராமரிப்பதற்கு அதிக செலவாகும் என்பதைக் குறிப்பிட்டதுடன் வருமானம் எதுவுமின்றி அதைச் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார். அதேநேரம் பேருந்து நிலையத்தினுள் அமைக்கப்பட்டுள்ள கடைகள் பிரதேச சபையின் அனுமதியின்றிக் கட்டப்பட்டதுடன் அதற்கான வாடகை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரியப்படுத்தினார். அதேபோல அந்தக் கடைகளுக்கான அனுமதி எவையும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வழங்கவில்லை என்றும் சபைக்கும் அதனால் எந்த வருமானமும் இல்லை எனவும் சபையின் தலைவர் க.மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஏனைய மாவட்டங்களில் உள்ளதைப்போன்று மத்திய பேருந்து நிலையத்தின் காணி உரிமத்தை கரைச்சிப் பிரதேசசபைக்கு வழங்குவதற்கும், கரைச்சிப் பிரதேச சபையால் பேருந்து நிலையத்தின் எல்லைப் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டு அங்கு முன்னுரிமை அடிப்படையில் தற்போது கடைகள் அமைத்துள்ளவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும், அதுவரையில் தற்போது கடைகளை அமைத்துள்ளவர்கள் பிரதேச சபைக்கு நிலவாடகை செலுத்தவேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். இதே நிலைப்பாட்டை வலியுறுத்திய வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் அ.சோதிநாதன், கட்டுப்பாடான பேருந்து நிலையத்தை உருவாக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார்.

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குவுக்கு சமர்பிக்கப்படும் என மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர், மத்திய பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.