கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று(11.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளினுடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் அரசாங்க அதிபரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன், நிறைவேற்றப்பட்ட வீதிகளின் வேலைகள் மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு, உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும், வீதி அபிவிருத்தி திட்டங்கள் தரமான மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதனுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கூட்டுப் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் எனவும், மேலும், இணைந்தவகையில் வினைத்திறனாக செயற்பட ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மீள்குடியேற்றப் பகுதியின் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பிரதம பொறியியலாளர் க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் எஸ். கிருபாகரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

