2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாத் திட்டங்கள்: யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!
2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 ஆண்டு அமுலாக்குவது தொடர்பான சாத்திய நிலைமைகள் அவற்றின் நிலையான தன்மை போன்றவை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பங்குபற்றுதலுடன் நேற்று (11.12.2025) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளாக காரைநகர் ஊர்காவற்றுறை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலப் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 9 செயற்றிட்டங்கள் சுற்றுலா அமைச்சிற்கு மாவட்டச் செயலகத்தால் பிரேரிக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த பொழுதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதியின் மூலமே இதற்கான நிதி விடுவிப்பு வழங்கப்படவுள்ளதனால், இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள் மற்றும் நிலையான தன்மை போன்றவை தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் , யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இத் திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாவிகளை கவரும் வகையில் மேலும் யாழ்ப்பாணத்தின் சுற்றுலா இடங்களை மேலும் மெருகூட்ட வேண்டும் எனவும், திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடியவகையில் அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், திட்டங்களின் சாத்தியப்பாடுகளுடன் வினைத்திறனாக நிறைவேற்ற வேண்டும் எனவும், மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், சரியான வினைத்திறனான திட்டங்களை அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களை அமுல்படுத்திய பின்னர் அதனை சரியான முறையில் பாராமரிப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் எமது பிரதேசம் சுற்றுலாத்துறையில் தென்பகுதியை விட பின் தங்கியுள்ளதாகவும், யாழ்ப்பாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அரசியல் பேதமின்றி அனைவரும் கருத்து ஒற்றுமையுடன் திட்டங்களை அடையாளம் கண்டு செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது அரசாங்கம் அடிப்படை உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எனவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவல்ல திட்டங்களை இனங்கான வேண்டும் எனவும், குறிப்பாக இயற்கையோடு இணைந்த வகையிலான திட்டங்களை முன்னேடுக்குமாறும் அத் திட்டங்களேயே வெளிநாட்டவர்கள் அதிகம் விரும்புவார்கள் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் தெல்லிப்பளை, காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை தவிசாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், தெல்லிப்பளை, காரைநகர், மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
