;
Athirady Tamil News

அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!

0

உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைன் தலைநகரான கீவ் மற்றும் கடலோர ஒடெசா ஆகிய 2 நகரங்களின் மீது நேற்று (ஜூன் 10) அதிகாலை ரஷியா, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் மூலம் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில், 2 பேர் பலியான நிலையில் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடெசா நகரத்தின் மீதான தாக்குதலில், அங்கு அமைந்திருந்த பெண்கள் மருத்துவமனை மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமைந்ததுடன், 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நகர ஆளுநர் ஒலேஹ் கிப்லர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைநகரான கீவ் மீதான தாக்குதல்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்துடன், நகரத்தின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட நிலையில் பல மணி நேரமாக ஏராளமான ட்ரோன்கள் அங்கு தாக்குதலில் ஈடுபட்டதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி ரஷியாவின் விமானப் படைத் தளங்களின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, ரஷியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒடெசா மற்றும் கீவ் நகரங்களில் ரஷியா அதன் தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் சூழலில் நடைபெறும் இந்தத் தாக்குதல்களினால், உக்ரைன் மக்கள் பெரும்பாலானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.