;
Athirady Tamil News

யேமனில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாகத் தாக்குதல்

0

துபை: யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக நகரான ஹூதைதாவில் இஸ்ரேல் கடற்படை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.

தங்களின் அல்-மசீரா தொலைக்காட்சி மூலம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் இடங்கள் குறிவைக்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது கடற்படை ஏவுகணை கப்பல்கள் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவித்தது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இஸ்ரேல் தனது கடற்படையை ஈடுபடுத்தியுள்ளது இதுவே முதல்முறை.

காஸா போரில் ஹமாஸூக்கு ஆதரவு தெரிவித்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீசுவது அதிகரித்துவருகிறது. இதற்கு ஹூதைதா, ராஸ் ஈஸா, அல்-சலீஃப் துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய இஸ்ரேல், அந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இணையதளம் மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக்கை விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக ஹூதைதா துறைமுகத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2014-இல் யேமன் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான யேமானியர்களுக்கு உணவு மற்றும் பிற

நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கான முக்கிய நுழைவாயிலாக ஹூதைதா துறைமுகம் உள்ளது.

அந்தத் துறைமுகம் தற்போது இஸ்ரேல் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது யேமன் மக்களுக்கான நிவாரணப் பொருள் விநியோகத்தை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.