;
Athirady Tamil News

செம்மணிப் புதைகுழி விவகாரம் – உண்மையையும் நீதியையும் நிலைநாட்டப்பட்ட வேண்டும்

0

செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி
உண்மையையும் நீதியையும் நிலைநாட்டத்தக்கதாக முன்நகரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வு பணிகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்தபோது காணமால் ஆக்கப்பட்ட பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்பது தெரியாத அவல நிலை தொடர்கின்றது. இந்த நிலையே இறுதிப் போரின் போதும்
நிகழ்ந்துள்ளது. அவர்களது உறவினர்கள் பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக போராடிவருகின்றார்கள்.

போருக்குப் பின்னான சூழ்நிலையில் யார் எந்த வலுவான சத்தியும் இயற்கை நீதிக்கு மாறாக நிகழ்ந்த அவலங்களை மறைக்க நினைத்தாலும் அவை ஏதோவொரு விதத்தில்
வெளிக்கிளம்பிய வண்ணமே உள்ளன.

செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு
வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்பட வேண்டும் என்பதுடன் புதைகுழிகளின் நீட்சி
அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது.

எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது. உரிய நிதியை உரிய காலத்தில் விடுவித்தல், புதைகுழி அகழ்வுப் பிரதேசங்களுக்கு உரிய பொலிஸ்
பாதுகாப்பினை வழங்குதல், அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் தரப்பினர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்காதிருத்தல் என்பன அவசியமானவையென எமது ஆசிரியர் சங்கம் கருதுகின்றது.

புதைகுழி விவகாரங்களை சரியான முறையில் அணுகுவது இலங்கைத்தேசத்தின் முன்னேற்றத்துக்கு அவசியமானது.

அவலமாக மரித்த உயிர்களின் ஆத்மாக்கள் அமைதிகொள்ளும் போது தான் நாடு முன்னோக்கிச் செல்ல முடியும். மாறாக அந்த ஆத்மாக்களின் அவலக்கதைகள் தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டால் அவற்றினால் விளையும் பாதிப்புக்கள் நாட்டை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும்.

இதனையுணர்ந்து செம்மணிப் புதைகுழி விவகாரம்
கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லப்படும் விடயமாக மாறவேண்டும் என்பதை யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக ஆசிரியர் சஙகத்தினராகிய நாம் வலுவாக பதிவுசெய்கின்றோம் – என்றுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.