;
Athirady Tamil News

பலாலி பொலிஸார் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!

0

யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பனங்களில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்

குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா , நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர்.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தனர். நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம்.

அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான “அமரபுர நிக்காய பீடம்” விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில் பொலிஸ் மா அதிபர் , வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம்.

பலாலி பொலிஸ் அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர்

அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய , சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும் , அவர்களுக்கு பலாலி பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.