ஏர் இந்தியா: தொழில்நுட்பக் கோளாறால் ஒரே நாளில் 13 விமான சேவைகள் ரத்து

கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 13 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரத்து செய்தது.
அகமதாபாத், சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையம் மற்றும் லண்டன், காட்விக் விமான நிலையம் இடையிலான ஏர் இந்தியாவின் விமான சேவை, “ஏஐ 159′ எனும் புதிய குறியீட்டுடன் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, முதல் விமானம் லண்டன் சென்று, அகமதாபாதுக்கு மீண்டும் திரும்பியது.
இந்நிலையில், அகமதாபாதில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டன் புறப்பட இருந்த விமானம், செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏர் இந்தியாவின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
இதேபோன்று, பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் தில்லி-பாரீஸ், தில்லி-துபை, மும்பை-சான் பிரான்சிஸ்கோ, பெங்களூரு-லண்டன், லண்டன்-அமிருதசரஸ், தில்லி வியன்னா உள்பட மொத்தம் 13 சர்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.
சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானத்தில் என்ஜின் கோளாறு: முன்பு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-மும்பை வழித்தடத்தில் ஏர் இந்தியா விமானங்கள் வளைகுடா நாடுகள் வழியாக நேரடியாக இயக்கப்பட்டு வந்தன.
சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து, மும்பை நோக்கிய சான் பிரான்சிஸ்கோ விமானங்கள் தொழில்நுட்ப இடைவேளைக்காக கொல்கத்தாவில் தரையிறங்கி, பின்பு பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி திங்கள்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு விமானம் கொல்கத்தா வந்திறங்கியது. சுமார் ஒரு மணிநேரம் இடைவேளைக்குப் பிறகு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் புறப்பட இருந்தது. இந்நிலையில், விமானத்தின் ஒரு என்ஜினில் கோளாறு கண்டறியப்பட்டது.
கோளாறைச் சீர்செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியால், கொச்சி-தில்லி இண்டிகோ விமானம் நாகபுரியில் அவசரநிலையில் தரையிறக்கப்பட்டது.
மஸ்கட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை கொச்சி வந்த விமானம், தொடர்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கொச்சி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, நாகபுரியில் விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு விமானம் மீண்டும் தில்லி பயணத்தைத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.