போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! – டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது.
மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான், ரஷியா கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதனிடையே இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால், இதை மறுக்கும் விதமாக இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 12 நாள்களாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்து, போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒருங்கிணைப்புடன் இஸ்ரேல் – ஈரான் என இருதரப்பிலும் போர் நிறுத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவு அளித்ததற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் பங்கேற்றதற்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி ” எனத் தெரிவித்துள்ளார்.