சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: சங்கானையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டம்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (26) சங்கானை பேருந்து நிலையம் முன்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இது குடும்பங்களிலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருள் பாவனையிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்கும் நோக்கில், இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “போதை அற்ற வாழ்வே ஆரோக்கியத்திற்கான வழி : எம் சமூகத்தை அழிக்கும் மது எமக்கு தேவைதானா? : அரசே புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்காதே : மது ஒழிப்பில் ஈடுபடும் ஜனாதிபதிக்கு கை கொடுப்போம் : போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள் என எழுதிய பதாகைகள் மற்றும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாகாண நல்லொழுக்க சம்மேளனத்தினர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்திற்கு, சங்கானை பிரதேச செயலகம், வலிகாமம் மேற்கு பிரதேச சபை,சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையங்கள்,முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் பொதுமக்களும் ஆதரவாக கலந்துகொண்டனர்.