ஆப்பிரிக்க பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல்! 20 மாணவர்கள் பலி!

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியானதாக, அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது.
தலைநகர் பாங்குயிலுள்ள பார்த்லெமி பொகாண்டா உயர்நிலைப் பள்ளிக்கூடத்திலுள்ள 2 தேர்வு மையங்களில், நேற்று முன்தினம் (ஜூன் 25) சுமார் 5,311 மாணவர்கள் தேர்வு எழுதியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்வு நடைபெற்ற சமயத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தின் மின்மாற்றி திடீரென வெடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயன்றதினால், அங்கு உண்டான கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தில் சுமார் 29 மாணவர்கள் பலியாகியிருக்கக் கூடும் என உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அந்தப் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்தபோது உண்டான மின்மாற்றி வெடிப்பினால் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்த அந்நாட்டு அதிபர் பாஸ்டின் டுடேரா, இன்று முதல் மூன்று நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.