;
Athirady Tamil News

ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்கும் பணி தீவிரம்: மத்திய அரசு

0

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டிகளிலிருந்து தரவுகள் எடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏர் இந்தியா விமானம் AI-171 துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) உடனடி விசாரணைக்காக, ஜூன் 13, 2025 அன்று பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பலதுறை குழு அமைக்கப்பட்டது.

சர்வதேச நெறிமுறையின்படி அமைக்கப்பட்ட இந்தக் குழு, விமானப் போக்குவரத்து மருத்துவ நிபுணர், ஒரு ATC அதிகாரி, அமெரிக்க அரசின் புலனாய்வு நிறுவனமான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் [NTSB] ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.

AAIB இயக்குநர் ஜெனரல் G.V.G. யுகந்தர் தலைமையிலான குழு, NTSB இன் தொழில்நுட்ப உறுப்பினர்களுடன் இணைந்து தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையை ஜூன் 24 மாலை தொடங்கின. கருப்புப் பெட்டியிலிருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி [CPM] பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 25, அன்று memory module வெற்றிகரமாக அணுகப்பட்டு அதன் தரவு AAIB ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. CVR [Cockpit Voice Recorder] மற்றும் FDR [Flight Data Recorder] தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது.

இந்த தரவு பகுப்பாய்வு, விபத்தின்போது நிகழ்ந்த நிகழ்வுகளின் வரிசையை வெளிப்படுத்தும். இதன்மூலம், விமான விபத்துக்கான காரணங்களைக் கண்டறிவதோடு, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுப்பதற்கும் தேவையான தரவுகளை வழங்கும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம் ஜூன் 12 அன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 270 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.