நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! – டிரம்ப் வேண்டுகோள்

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மீது நடைபெற்றுவரும் ஊழல் வழக்கு விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள செய்தி நிறுவனமான பெஸெக் டெலிகாம் சேனலில் தன்னையும், தனது மனைவி சாரா நெதன்யாகு குறித்து நல்லவிதமான செய்திகளை வெளியிடுவதற்காக 1.8 பில்லியன் சேக்கேல்கள்(500 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) லஞ்சம் கொடுத்ததாக அரசு தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், இந்த வழக்கு விசாரணையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு போர் வீரன் என்று தெரிவித்திருக்கிறார்.
நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப்
இதுபற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றான ஈரானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு, நெதன்யாகுவின் வலுவான தலைமையில் இயங்கும் இஸ்ரேல், தங்கள் பிரதமருக்கு எதிராக சூனிய வேட்டையில் ஈடுபடுகிறது என்பதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்!.
இஸ்ரேலின் நீண்டநாள் எதிரியான ஈரானுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டோம். புனித பூமியான இஸ்ரேல் மீது நெதன்யாகுவைவிட யாரும் இவ்வளவு அன்பு வைத்திருக்க முடியாது. வேறு ஒருவராக இருந்திருந்தால், அதிக இழப்புகள், சங்கடங்கள் மற்றும் குழப்பங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கும்.
இஸ்ரேலின் வரலாற்றில் வேறு எந்த போர் வீரனைப் போலவும் இல்லாத, நெதன்யாகு ஒரு சிறந்த போர் வீரன். உலகில் உள்ள சக்திவாய்ந்த அணு ஆயுத கட்டமைப்புகளை அழிப்பது என்பது யாரும் சிந்தித்துப் பார்க்காத ஒன்று. அதை நாங்கள் இருவரும் நிறைவேற்றியுள்ளோம்.
இஸ்ரேல் மக்களின் வாழ்வுக்கான நாங்கள் இருவரும் போராடினோம். இஸ்ரேலின் வரலாற்றில் நெதன்யாகுவைவிட கடினமாகவும் திறமையாகவும் போராடியவர்கள் யாரும் இருக்க முடியாது.
இதையெல்லாம் மீறி, இந்த நீண்ட கால நடவடிக்கைக்காக நெதன்யாகு நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதை நான் அறிந்தேன். பதவியில் இருக்கும் இஸ்ரேல் பிரதமர் வழக்கு விசாரணைக்கு அழைப்படுவது இதுவே முதல்முறை.
நெதன்யாகு மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இஸ்ரேல் அரசும் அவ்வாறே தகுதியானது. நெதன்யாகுவின் விசாரணை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். நாட்டிற்காக இவ்வளவு அர்ப்பணிப்புகளைச் செய்த ஒரு பெரிய ஹீரோவுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
நெதன்யாகுவைவிட அமெரிக்காவுடன் இந்தளவுக்கு இணக்கமாக செயல்படக் கூடியவர் யாரும் இல்லை. இஸ்ரேலைக் காப்பாற்றியது அமெரிக்காதான். இப்போது நெதன்யாகுவைக் காப்பாற்றப்போவதும் அமெரிக்காவாகத்தான் இருக்கப் போகிறது. இந்த நீதியின் துரோகத்தை அனுமதிக்க முடியாது!” எனப் பதிவிட்டுள்ளார்.
Donald Trump demands for Netanyahu to be pardoned & for the trial against Netanyahu, starting Monday, to be canceled immediately.
“It was the U.S that saved Israel and now it’s the U.S that saves Bibi Netanyahu”
He called Netanyahu a “Great war time PM” and “Warrior” while… pic.twitter.com/S6c71qB8qH
— Dr. Anastasia Maria Loupis (@DrLoupis__) June 25, 2025