;
Athirady Tamil News

யாழ். பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நிறைவு: தெல்லிப்பளை முதலிடம்

0

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனனின் தலைமையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பா.முகுந்தனும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந் விளையாட்டு விழாவில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வருடாந்த விளையாட்டு விழாவானது பெரு விழாவாக முன்னைய காலங்களில் நடைபெற்றது எனவும், இவ் இறுதி நிகழ்வில் வீர வீராங்கனைகளின் எண்ணிக்கை குறைவாகவிருப்பதாகவும், பிரதேச மட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பின்னர் மாவட்ட மட்டத்தில் நடைபெற்று மாகாண மற்றும் தேசிய போட்டிகளுக்கு வீர வீராங்கனைகள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். விளையாட்டின் முக்கியத்துவம் கட்டாயத் தேவை எனவும் குறிப்பிட்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், பிரதேச செயலகங்களுக்கிடையிலான இன்றைய இப் போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளின் எண்ணிக்கையினை பார்க்கும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டுத் துறை வீழ்ச்சியடைந்துவிடுமோ என்ற ஐயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் கூடியளவு வீர வீராங்கனைகள் பங்குபற்றுவதை விளையாட்டு உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்தி செயற்படுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டு, யாழ்ப்பாண விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் பதக்கங்களின் அடிப்படையில் முதலாம் இடத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும், இரண்டாம் இடத்தினை நல்லூர் பிரதேச செயலக அணியும், மூன்றாவது இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.