பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் மாயாமானவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, கிழக்கு ஜாவாவின் கெட்டபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை இரவு 65 பேருடன் பாலியில் உள்ள கிலிமானுக் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல், சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது.
இந்த படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்கள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மணிக்கணக்கில் கொந்தளிப்பான நீரில் மிதந்ததால் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக பன்யுவாங்கி காவல்துறைத் தலைவர் ராம சம்தாமா புத்ரா தெரிவித்தார்.
மேலும், மீட்புப் பணியில் இரண்டு இழுவைப் படகுகள் மற்றும் இரண்டு சிறிய அளவிலான கப்பல்கள் உள்பட ஒன்பது படகுகள் புதன்கிழமை இரவு முதல் அந்த பகுதியில் மாயமான 43 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த குழுவினர் இரண்டு மீட்டர் (சுமார் 6.5 அடி) உயர அலைகளுடன் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் படகு விபத்துகள்
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் முக்கிய போக்குவரத்தாக படகுகள் உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படாததால் அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுகின்றன.
கடந்த மே மாதத்தில், பெங்குலு மாகாணத்தில் ஒரு மரப் படகு மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பலியாகினர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர்.
கடந்த மாதம், பாலி கடற்கரையில் 89 பேரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டாலும், விளைவுகள் எப்போதும் எதிர்பார்த்தப்படி சாதகமாக இருக்காது.