நான் இன்னும் 30 – 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 – 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் இன்று (ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், தரம்சாலாவிலுள்ள பிரதான தலாய் லாமா கோயிலில், நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைக் குறித்து பேசிய தலாய் லாமா, கடவுளின் ஆசீர்வாதம் தனக்கு உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தன்னிடம் தென்படுவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
“ பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, எனக்கு அவலோகிதேஸ்வராவின் ஆசீர்வாதம் இருப்பதாக உணருகின்றேன். என்னால் முடிந்ததை இதுவரை செய்துள்ளேன். நான் மேலும் 30 – 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். நாம் நமது நாட்டை இழந்து, இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு வாழ்வதனாலே தரம்சாலாவில் வசிப்பவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய முடிந்தது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தலாய் லாமா குறித்து உருவான வதந்திகளுக்கு, நாங்கள் மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எந்தவொரு கருத்து தெரிவிக்கவோ அல்லது நிலைப்பாடு எடுக்கவோ மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.